728x90 AdSpace

Suthan
  • Latest News

    Friday, July 17, 2015

    அன்பினால் இறைவனை அடையலாம்



    பகவான் ராமகிருஷ்ணரின் 180வது ஜெயந்தி

    பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவடிகளில் அனைத்து மக்களும் அமர்வதால் மட்டுமே இந்தியா உயர முடியும். ராமகிருஷ்ணரின் வாழ்க்கையையும்  உபதேசங்களையும் ஒவ்வொருவரும் அறிந்து, நாலா திசைகளிலும் உள்ள அனைவருக்கும் பரப்ப வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். இத்தகைய  சிறப்பு வாய்ந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 180வது ஜெயந்தி விழா நாளை (20ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு உலகமெங்கும் விமரிசையாக நடைபெறுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தாவுக்கு அருகே ஹுக்ளி மாவட்டத்தில் கமார்புகூர் கிராமத்தில் ஷுதிராம் சட்டர்ஜி, சந்திரமணி எனும் தம்பதியருக்கு  1836ம் ஆண்டு, பிப்ரவரி 18ம் தேதி கதாதரர் என்ற பகவான் ராமகிருஷ்ணர் மகனாக பிறந்தார்.

    அவரது பெற்றோர் வறுமையில் வாடினாலும், தானதர்மங்களில் சிறந்து விளங்கினர். சிறுவயதிலேயே கதாதரர்க்கு பரவச நிலையும் ஆன்மிக அனுபவங்களும்  கிடைக்கப் பெற்றது. எனினும், அவருக்கு ஏட்டு கல்வியில் நாட்டம் செல்லவில்லை. தனது சகோதரர் ராம்குமாருடன் கொல்கத்தா சென்ற கதாதரர், அங்கு  காளிதேவியின் நேரடி தரிசனத்துக்காக, தன்னையே மாய்த்துக் கொள்ள கதாதரர் துணிந்த வேளையில், அவருக்கு காளிதேவி காட்சியளித்தார். காளிதேவியின்  அருள் பெற்ற தெய்வீக குழந்தையாகவே வாழ்ந்த கதாதரர், அதன்பிறகு தன்னையும் தனது கடமைகளையும் அர்ச்சகர் பொறுப்பையும் மறந்துவிட்டார்.

    அவரது தீவிர பக்தியினால், கதாதரருடனே காளிதேவியும் நிதர்சனமாக வாழ்ந்து வந்தாள். அவருக்கு 21ம் வயதில் சாரதாதேவியை திருமணம் செய்து  வைத்தனர். ஆனால், அவரது தீவிர ஆன்மிக சாதனைகளுக்கு திருமணம் தடையாக இருக்கவில்லை. கடவுளை எண்ணற்ற வழிகளில் அடைந்து மகிழ்ச்சி  பெறவேண்டும் என்று எண்ணிய கதாதரர், முதன்முதலாக தட்சணேஸ்வரத்தில் பைரவி பிராம்மணி என்ற ஆன்மிக பெண்மணியை சந்தித்தார். கதாதரருக்கு  அவர் தாந்திரீக சாஸ்திரங்களை கற்று தந்தார். அவரது வழிகாட்டுதலில் கதாதரர் தாந்திரீக சாதனைகள் செய்து காளிதேவியின் அருளை மேலும் பெற்றார்.

    மூன்று வருடங்களுக்குப் பிறகு தோதாபுரி என்ற சாதுவிடம் வேதாந்த சாஸ்திரங்களை கதாதரர் கற்றார். உபநிஷதங்கள் கூறுகிற அத்வைத ஞானத்தின்  உன்னதங்களை கதாதரர் பெற்றார். துறவறம் மேற்கொண்டு, கதாதரர் ராமகிருஷ்ணராக உருமாற்றம் பெற்றார். இந்து மற்றும் பிற மதங்களைப் பின்பற்றுதல் மூவாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க இந்து மதத்தின் நெறிமுறைகளை பின் பற்றி ராமகிருஷ்ணர் இறைவனை அடையும் பேறு பெற்றார். அதன்பின், இஸ்லாம்  மற்றும் கிறிஸ்தவ மதங்கள் கூறும் பாதைகள் வழியாக மிக குறுகிய காலத்தில் இறைவனின் அருள் பெற்றார்.

    ஏசுவையும் புத்தரையும் கடவுளின் அவதாரமாக கருதினார். அதே சமயம் அனைத்து மத குருமார்களையும் சீக்கிய குருமார்களையும் மதித்தார். அனைத்து  மதங்களும் ஒரே இறைவனை அடைவதற்கான பாதையாகக் கண்டு ராமகிருஷ்ணர் தெளிவு பெற்றார். தனது பன்னிரண்டு வருட தவ வாழ்க்கையில் கண்டறிந்த  உண்மைகளை எத்தனை மதங்களோ, அத்தனை வழிகள் என்று சுருக்கமாக ராமகிருஷ்ணர் தெரிவித்தார்.

    மனைவியை பூஜித்தல்

    ராமகிருஷ்ணரின் பெருவாழ்வு உன்னதமானது. அவர் சாரதாதேவியை திருமணம் செய்து கொண்டாலும், சாதாரண இல்லற வாழ்வை வாழவில்லை. துறவறம்  மேற்கொண்டு, தம்மை நாடி வந்த மனைவியை மறுப்பின்றி ஏற்றார். 1872ம் ஆண்டு தட்சணேஸ்வரத்துக்கு வந்த மனைவியை வரவேற்று, சாட்சாத் தேவியாகப்  பாவித்து பூஜை செய்தார். தனது இல்லறத்தில் சாரதாதேவியை வாழ்க்கை துணைவியாக மட்டுமின்றி, தமது காலத்துக்குப் பிறகு தமது ஆன்மிகப் பணிகளை  மேற்கொண்டு நடத்துபவராகவும் ராமகிருஷ்ணர் உருவாக்கினார்.

    ராமகிருஷ்ணரின் இறுதி காலம்

    வரலாறு காணாத தவ வாழ்க்கை, எண்ணற்ற பக்தர்களுக்கு வழிகாட்டி, அவர்களையும் இறைநெறியில் செலுத்துவது போன்ற பணிகளில் ராமகிருஷ்ணர்  இடையறாது பணியாற்றினார். இதனால் ராமகிருஷ்ணர் 1886ம் ஆண்டு, ஆகஸ்ட் 16-ம் தேதி தொண்டை புற்றுநோய் காரணமாக, காளிதேவியின் நாமத்தை  உச்சரித்தபடியே அவளது திருவடிகளை அடைந்தார். ராமகிருஷ்ணரின் அயராத ஆன்மிக மற்றும் தவ வாழ்க்கையை தொடர்ந்து மேற்கொள்ள அவரது மனைவி  சாரதாதேவி முதன்மையாகவும், அதன்பின் சுவாமி விவேகானந்தர் தலைமை பொறுப்பேற்று, பல்வேறு நாடுகளில் சீரிய சொற்பொழிவின் மூலம் ஏராளமானோர்  சீடர்களாகினர். ராமகிருஷ்ணருக்கு பணிவிடை செய்த இளைஞர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து, ராமகிருஷ்ணர் கடைசியாக வாழ்ந்த காசிப்பூரில் முதன்முறையாக  ராமகிருஷ்ணா மடத்தை உருவாக்கினார்கள். அதன்பின் இன்று உலகம் முழுவதும் ராமகிருஷ்ண மடம் ஆல்போல் தழைத்து விரிந்து படர்ந்து, ஏழை-எளிய  மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆன்மிக, கல்வி மற்றும் பல்வேறு சமூகசேவைகளை செய்து வருகிறது.

    ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

    இவ்வுலகில் மானிடப் பிறவி கிடைத்தற்கரியது. இத்தகைய மானிட பிறவி வாய்த்தும், இந்த பிறவியிலேயே ஒருவன் இறைவனை அறிய முடியாமல் போனால்,  அவனது பிறவி வீணாகிப் போகும். இரவுநேரங்களில் வானில் பல நட்சத்திரங்களை நாம் காண்போம். ஆனால், அவை காலையில் சூரியன் உதயமானதும்  மறைந்துவிடும். அதனால், பகலில் நட்சத்திரங்கள் இல்லை என்று கூறிவிட முடியாது. மனிதா, அறியாமையில் மூழ்கியுள்ள உன்னால் கடவுளைக் காண  முடியவில்லை என்பதற்காக, கடவுளே இல்லை என்று கூறிவிட முடியாது.

    ஒவ்வொருவரும் மனதினால் வஞ்சகமாக இருக்க வேண்டாம். உனது மனமும் செயலும் நேர்மையாகவும், ஒருங்கிணைந்தவையாகவும் இருக்கட்டும். வெற்றி  உன் பக்கம் வரும். நேர்மையான, எளிய மனதுடன் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய். உனது பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக்கும். உன் மனதில்  தேவையற்ற சிந்தனைகளுக்கும் கவலைகளுக்கும் இடம் அளிக்க விடவேண்டாம். தேவையானதை குறித்த நேரத்தில் மட்டும் செய். உன் மனம் என்றும்  இறைவனையே நினைத்திருக்கட்டும். பக்தனின் இதயமே, இறைவனின் உறைவிடம். எல்லா உயிர்களிலும் இறைவன் வாழ்கிறார் என்பதில் சந்தேகம்  எழவேண்டாம்.

    ஆனால், பக்தனின் இதயத்தில் மட்டும் அவர் சிறப்பாக குடிகொள்கிறார். பக்தனின் இதயமே இறைவனின் வரவேற்பறை ஆகும். தூய ஞானமும் தூய பக்தியும்  ஒன்றே. இரண்டுமே ஒரே லட்சியத்துக்காக மனிதனை வழிநடத்தி அழைத்து செல்கின்றன. இறைவனை அடையும் பக்தி பாதை மிக எளிதானது. கடவுளின் சிறந்த  பக்தன் என்பவன், கடவுளை நேருக்கு நேராக காண்பவன் மட்டுமே. அவரை கண்ட பிறகு, அந்த கடவுளே இந்த உலகமாகவும், உயிர்களாகவும் 24 பிரபஞ்ச  தத்துவங்களாகவும் இருக்கிறார் என்பதை உணர முடியும். நீங்கள் குடும்ப வாழ்க்கையில் இருப்பது தவறில்லை.

    ஆனால், உங்கள் மனதை கடவுளிடம் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிலும் வெற்றி கிடைக்காது. ஒரு கையால் இல்லறக் கடமைகளை செய்யுங்கள்.  மறுகையால் இறைவனைப் பற்றிக்கொள்ளுங்கள். இல்லறக் கடமைகள் நிறைவடைந்ததும், நமது இரு கைகளாலும் இறைவனை இறுகப் பற்றிக்கொள்ளலாம்  என்பதே நான் உங்களுக்கு கூறும் ஒரு உண்மை. இறையருள் என்ற காற்று இரவும் பகலும் உங்கள்மீது வீசிக்கொண்டிருக்கும். வாழ்க்கை பெருங்கடலில் நீங்கள்  விரைந்து முன்னேற வேண்டும் என்றால், உங்கள் படகின் பாய்களை (மனதை) விரியுங்கள். உங்களால் முடிந்தவரை தொடர்ந்து இறைநாமத்தை சொல்லுங்கள்.  இந்த கலியுகத்தில் இறைநாமம் மனிதனுக்கு மிகுந்த பலன் அளிக்கக்கூடியது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments :

    Post a Comment

    Item Reviewed: அன்பினால் இறைவனை அடையலாம் Rating: 5 Reviewed By: Admin
    Scroll to Top