728x90 AdSpace

Suthan
  • Latest News

    கோயிலின் வரலாறு

    ஆலய வரலாறு

    செங்குந்தர் உற்பத்தி:

    பூர்வத்தில் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் முதலிய தேவர்கள் எல்லாம் சூரபத்மன், சிங்க முகன், தாரகன் முதலிய அசுரர்களால் துன்புற்று பரமகருணா நிதியாகிய சிவபெருமானிடம் சென்று முறையிட்ட போது சிவ பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டு சரவண பொய்கையில் அசுரர்களை அழிப்பதற்காக ஆறுமுக பெருமான் திரு அவதாரம் பெற்றார். இத் தீப்பொறிகளின் வெப்பம் தாங்கமாட்டாமல் எல்லா தேவர்களும் உமாதேவியாரை அடைந்த போது அவரின் திருவடி சிலம்புகளில் இருந்து சிதறிய நவரெத்தினங்கள் எல்லாம் சிவபெருமான் திருமுன் விளங்கின. சிவ பெருமானின் ஆணையினால் சிதறிய நவரெத்தினங்களில் இருந்து ஒன்பது சக்திகள் தோன்றின. அந்த நவசக்திகளிடமிருந்து தேவ தேவரின் திருவருளினாலே அவர்களின் வயிற்றிலே யோகம் செய்து கொண்டிருந்த நவவீரர்கள் உருவாகினர். உமாதேவியாரின் வியர்வையில் இருந்து ஒரு இலட்சம் வீரர்கள் உதித்தார்கள். அவர்கள் இடியொத்த சொல்லை உடையவர்களும் வாளையும் பரிசையும் கையேந்தியவர்களுமாக இருந்தனர். இவ்வாறு உதித்த நவவீரர்கள் எமது மைந்தர்கள், அறிவுடையவர்கள், ஆற்றலுடையவர்கள், மானமுடையவர்கள், ஒழுக்கமுடையவர்கள், இவர்கள் புதியவர்கள் அல்ல. நந்தி முதலான கணங்களுக்கெல்லாம் தலைவர்கள் என்று கூறி சிவபெருமானும் உமாதேவியாரும் தனித்தனி ஈட்டியும், வாளும் கொடுத்து மேற்குறித்த ஒரு இலட்சம் வீரர்களோடு நீங்களும் கூடி உங்களுக்கு நாயகனும் சகோதரனுமாகிய ஆறுமுக கடவுளை நீங்காது அவன் பணித்த தொண்டுகளை செய்து கொண்டு இருக்க கடவீர்கள் என்று திருவாய் மலர்ந்தருள அவர்களும் அதற்கிணங்கி வணங்கி முருக பெருமானிடம் அகலாது அசைவற்ற அன்புடன் இருந்தனர்.

    முருக பெருமானிடம் இவர்களை உனது சகோதர்களாக ஏற்று தேவர்களின் துன்பங்களை நீக்குமாறு பணிக்கப்பட நவவீரர்களான வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரபுரந்திரர், வீரராக்கதர், வீரமகேஸ்வரர், வீரமாத்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் அனைவருக்கும் படைத்தொழிலுக்குரிய குந்தம் எனப்படும். கைவேல், ஈட்டி, சவளம் எனப்படும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு சூரபத்மன் முதலிய அசுரர்களுடன் போரிட ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள். அசுரப் படைகளை குந்தப் படையினால் அழித்தமையால் குந்தப்படை செங்குருதிமயமாகியது. இதனால் இவர்களே செங்குந்தர் எனவும் கைக்கோளர் எனவும் அழைக்கப்பட்டார்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தாரகா சூரன்வதைச் சிறப்பிலே பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.

    "வனமுறு வாசமா வைகல் விட்டியா சனமுற விண்ணிடந் தனிவைகுந்தமும் இன்னுறு பங்கய மூவர்க் கெய்தவே சினமுறு தாரக செறி செங்குந்தமே”

    இவ்வாறு சிறப்பு பெற்ற முருகனுடைய சகோதரர் பரம்பரையில் இருந்து தோன்றிய செங்குந்த குலமக்களால் பரிபாலிக்கப்பட்டு வருவதே செங்குந்த வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதிருநீலகண்ட விநாயகர் ஆலயமாகும்.

    மேற்படி இவ்வாலயத்தின் வரலாற்று சான்றுகளை சற்று நோக்குவோமாயின் கிழக்கு மாகாணத்தில் "சேருவிலை” க்கு தெற்கே மேன்காமம், மல்லிகைத்தீவு, ஈச்சிலம்பற்று, ஆனைத்தீவு, மாவடிச்சேனை, வெருகல், கதிரவெளி, பாற்சேனை, பனிச்சங்கேனி, மாங்கேனி, கல்குடா, கிண்ணையடி, சித்தாண்டி, களுவன்கேணி போன்ற இடங்களிலும் மட்டக்களப்பு பகுதியில் மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி, கோவில்குளம், காயங்கேயனோடை (காங்கயனோடை), பாலமுனை போன்ற இடங்களிலும் ஆதிகாலம் தொடக்கம் வேடர்கள் வாழ்ந்தார்கள் என்பது மறுக்கவோ, மறைக்கவோ, முடியாத உண்மைகள். அதே போல் திமிலதீவில் “திமிலர்” எனும் இனத்தவர்களும் வசித்தனர். என

    ஆதிக் குடிகள் வரலாற்றுச் சான்றுகள்:

    நாவற்குடாவிற்கு தெற்கே மஞ்சந்தொடுவாயில் "மஞ்சன்” எனும் வேடத் தலைவனும் அவன் இனத்வரும் வசித்தனர். இவர்கள் சேனை செய்த இடம் சேனைத் தெரு என பெயர் பெற்றது. இப்பகுதி இன்று காத்தான்குடி 1ம் குறிச்சியில் சுள்ளிமுனை சந்தையும் அதனைச் சார்ந்த இடமுமாகும். காத்தானும் அவனது இன சனங்களும் வசித்த இடம் காத்தான்குடி 5ம் குறிச்சி மெத்தைப் பள்ளி வாசலையும் சந்தையையும் சார்ந்த இடமாகும். "கங்கன்" எனும் வேடனும் அவனது இனத்தவர்களும் வசித்த பகுதியே காங்கேயனோடை எனவும் வழங்கப்படுகின்றது. இலங்கையின் சைவ கோயில் எனும் புத்தகத்தில் முருகப் பெருமானின் சிலை கொண்டு வரப்பட்டதால் காங்கேயனோடை என பெயர் வழங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதனை நாம் ஆராய்கின்ற போது இரண்டு விடயங்களும் உண்மை என தெரிகிறது. பாலமுனைப் பகுதியில் ஐயன், நாகன் எனும் வேடத்தலைவர்களும் அவனது இனத்தவர்களும் வாழ்ந்தனர் என வரலாறுகள் கூறுகின்றது.

    ஆலய உற்பத்தி:

    இது இவ்வாறிருக்க கி.பி. 312 ல் உலக நாச்சி எனும் கலிங்க இளவரசி ஸ்ரீ மேகவண்ணன் எனும் சிங்கள மன்னனின் அனுசரனையுடன் சிவன் கோயிலைக் கட்டி மண்முனையை மட்டக்களப்பு எனும் பெயரோடு ஆட்சி செய்தாளென்றும் “மட்டக்களப்பு மான்மியம்" எனும் நுநூல் கூறுகின்றது.

    தற்போது மட்டக்களப்பு எனும் வழங்குமிடம் பிற்காலத்தில் போர்த்துக்கீசர் கோட்டை கட்டி மட்டக்களப்பு கோட்டை என பெயர் சூட்டியதால் ஏற்பட்டதே. உலக நாச்சியுடன் கலிங்கர் (காலிங்காகுடி), பாண்டியர் (சம்மானோட்டிகள்), கேரளர் (சேரர்) வங்கர் (வங்காளக்குடி) போன்றோர் வந்து மண்முனை பகுதியிலும் வியாபாரத்திற்காக வந்த பட்டாணிகள் (தற்போதைய முஸ்லிம்கள்) காத்தான்குடி பகுதியில் குடியேறிய படியால் வேடரினம் இடம் பெயர்ந்து கடைசியாக பாலமுனை பகுதிக்கு ஒதுங்கினர். இங்கு தற்போது முஸ்லிம்கள் குடியேறியதால் இவர்கள் தெற்கே நகர தொடங்கினர். ஆனால் இவ்விடம் தற்போதம் வேடர் குடியிருப்பு என வழங்கப்படுவதை அறியமுடிகிறது. கடந்த நூறு (100) ஆண்டுகள் வரையும் இங்கு வேடரினம் வாழ்ந்து வந்துள்ளது. இவர்கள் பிற்காலத்தில் தாளங்குடா, கோயில்குளம், புதுக்குடியிருப்பு, மாவிலங்கமுனை பகுதிக்கு சென்று குடியேறினர். மேற்படி பகுதிகள் யாவும் புதைபொருள் ஆராய்ச்சிக்கு உட்பட்டால் பல உண்மைகளை மேலும் உணரக் கூடியதாக இருக்கும்.

    உலக நாச்சியின் காலத்திற்கு பின் சிகர கோபுரத்தை உடைய கோயிலை கிராமமக்கள் பரிபாலித்து வாழ்ந்து வந்தனர். இவ்வாலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரருக்கு வேல் கொண்டு செல்லும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. இப்படியாக வாழ்ந்த மக்களுக்கு கேடு காலம் கிட்டியது.

    16ம் நூற்றாண்டின் “ஜெராணி மோடி அசலேடோ” எனும் போர்த்துகீச தளபதி படை எடுத்து வந்து கோயிலை இடித்து அழித்து கொள்ளையிட்டான். இதனால் இங்கு வாழ்ந்த மக்கள் ஆரைப்பற்றைக்கு (ஆரையம்பதி) குடிபெயர்ந்தனர். அக்காலத்தில் ஆரைப்பற்றை பகுதி காடாக இருந்ததோடு கோயில் குள பகுதி நாடாக இருந்தமையும் நோக்கத் தக்கது. ஆரைப்பற்றையில் குடியேறிய மக்கள் மேற்படி கோயிலின் இடிபாடுகளுக்கிடையில் ஒரு வேலொன்றை கண்டெடுத்து அதனை ஒரு மரத்தடியில் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த இடமே தற்போது முருகன் ஆலயம் அமைந்த இடமாகும். இவ்வாறு இவர்கள் அன்போடு வழிபட்டு வரும் போது (கைக்கோளாளர்) செங்குந்தர் எனும் பெரியாருக்கு முருகன் கனவில் தோன்றி தனக்கு ஒரு ஆலயம் அமைத்து தரும்படி கேட்டதாகவும் அதனால் அவர் கற்களால் ஒரு கோயிலைக் கட்டி அதில் அந்த வேலாயுதத்தை தாபித்து அபிஷேகம் செய்ததாகவும் வரலாற்று நிகழ்வுகள் கூறுகின்றன. இதனை சான்று படுத்தும் வகையில்,

    வண்டாய நான் மறை பாடும்

    மலர் சேர் காத்தான்குடிதனில்

    பண்டு உள்ள ஊர் சனங்கள் பரிவாய் சேர்ந்தோராலயத்தை

    கண்டு களித்து வணங்கி வரக் கதிர் செங்குந்த சாதியினில்

    உண்டு எனவே நாகப்பர் உயராலயத்தை பதிப்பித்தார்.

    எனும் பாடல் 1975 1980ம் ஆண்டு கந்தசாமி கோயில் வரவு செலவு அறிக்கையிலும் 1999ம் ஆண்டு கும்பாபிஷேக மலரிலும் பிரசுரிக்கப்ட்டுள்ளது. இந்த நாகப்பர் பிள்ளை இல்லாமல் இருந்து முருகன் கோயிலில் விநாயக விரதம் அனுஷ்டித்தார் என்றும் விநாயகர் கனவில் தோன்றி இவருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் பிள்ளை பிறந்தவுடன் தனக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்றும் கூறினார். அதன்படி சில வருடம் சென்ற பின் அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இதனால் மனம் மகிழ்ந்த நாகப்பர் ஆரைப்பற்றை வடக்கு பகுதியில் ஒரு வில்வ மரத்தின் கீழ் வெள்ளை சலவைக் கல்லால் ஆன ஒரு விநாயகர் உருவத்தை ஸ்தாபித்தார். கனவில் அவருக்கு காட்சி கொடுத்த விநாயகர் நீல நிற மேனி உடையவராகவும் சிறப்பாக கண்டம் (கழுத்து) நீல நிறமுடையவராகவும் காணப்பட்டதால் அவர் ஸ்தாபித்த விநாயகருக்கு "நீலகண்ட விநாயகர்” என பெயர் பெறலாயிற்று. இங்கு ஆரைப்பற்றை எனும் இடம் தற்போது ஆரையம்பதி என சிறப்பிக்கப்படுகின்றது. இங்கு இக்கிராமத்தின் வளர்ச்சி பற்றி குறிப்பிடுதல் எதிர்கால சந்ததியினருக்கு சான்றாக அமையுமென நினைக்கின்றேன். மேற்படி ஆலயத்திற்கு 1907ம் ஆண்டு தென் இந்திய குமாரசுவாமி பேட்டையைச் சேர்ந்த தர்மபுரி ஆதினகுரு சதோதய முனிவரால் பாடப்பட்டு நொத்தாரிஸ் மூத்ததம்பி முதலியாரால் அச்சிட்டு வெளியிடப்பட்ட பிரணவ அட்டகம். விநாயகர் பாமாலை, விநாயகர் பதிகம் என்பவற்றின் இறுதியிலே ஆரையம்பதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அன்றிலிருந்து இவ்வ¡ஆரையப்பதிஎன அழைக்கப்பட்டிருக்கலாம் என அறியக்கிடைக்கிறது.

    இதன் வடக்கு எல்லையாக காத்தான்குடி கிராமத்தையும் கிழக்கு எல்லையாக வங்கக்கடலையும் தெற்கு எல்லையாக பாலமுனை, சிகரம், கோயில் குளம் கிராமங்களையும், மேற்கே மட்டக்களப்பு வாவியையும் கொண்டுள்ளது. பல பாடசாலைகளையும், ஆலயங்களையும், பிரதேச செயலகம், பிரதேச சபை, தபால் நிலையம், விவசாயக் கந்தோர், கைத்தொழில் திணைக்களத்தினால் நடத்தப்படும் பயிற்சி நிலையம், பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், பொது நூல் நிலையம், பொதுச்சந்தை, மாவட்ட வைத்தியசாலை, பொது விளையாட்டு மைதானம், பொது மயானம், மாதா கோயில், பள்ளிவாசல் போன்றவற்றை தன்னகத்தே அடக்கியுள்ளதால், கல்வியிலும் சமய அனுட்டானங்களிலும். விளையாட்டுத் துறையிலும், அரசியலிலும் முன்னேற்றமடைந்து உயர்பதவி நிலை உத்தியோகத்தர்களையும், கல்வி மான்களையும், பல தொழில்களைச் செய்கின்றவர்களையும், அனைத்து இனமத மக்களையும் தன்னகத்தே கொண்டு செந்தமிழும், ஆங்கிலமும், சிவநெறியும் “முப்புரி நூல்" போல் மிளிர்கின்றது.

    இவ்வாறு சிறப்புப் பெற்றிருக்கும் கிராமத்தின் வடபால் காத்தான்குடி எல்லையில் செங்குந்தர் வீதியில் ஸ்ரீ திருநீலகண்ட விநாயகர் ஆலயம் அமையப் பெற்றிருக்கின்றது. இவ்வாலயம் 16ம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் களிமண்ணால் கட்டப்பட்டது. இப்பகுதிகளில் செங்குந்த குல மக்கள் செறிந்து வாழ்ந்ததால் அவர்கள் வாழும் மத்திய பகுதியில் இது அமைக்கப்பட்டது. வட பகுதி வசித்த செங்குந்த குல மக்கள் நெசவு தொழில் வீழ்ச்சியடைந்ததால் இஸ்லாமிய மக்களுக்கு தங்கள் காணிகளை விற்று தெற்கு பக்கம்

    குடியேறியதால் இவ்விடங்களில் இஸ்லாமிய மக்கள் குடியேறி தமிழ் மக்கள் வாழ்ந்த இடம் காத்தான்குடியுடன் சேர்க்கப்பட்டுவிட்டது. எனினும் இவ்வாலயத்திற்கு சொந்தமான நன்கொடை செய்யப்பட்ட தென்னங்காணிகள் இன்றும் காத்தான்குடி எல்லைக்குள் கோயில் வளவு எனும் பெயரோடு அமைந்திருக்கின்றது.

    இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஊற்றெடுத்துப் பாயும் நீரோடையின் சங்கம ஸ்தானமே காங்கேயனோடை என வழங்குவதும் ஈண்டு குறிப்பிட வேண்டிய ஒன்று. இக்கோயில் அமைக்கப்பட்ட நிலம் ஆரம்பத்தில் அரசினருக்கு சொந்தமாயிருந்தது. அதனை அரசிடமிருந்து ஏலத்தில் காசி நாதப்பட்டங்கட்டியார் வாங்கினார். இதற்குரிய பணத்தை ஆரையம்பதி செங்குந்த குல மக்கள் கொடுத்தனர் என்று கோயில் வளவு உறுதி கூறுகின்றது.

    18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலக நாதப்பட்டங்கட்டியார் வண்ணக்கராக இருந்து செங்குந்த குல மக்களும் ஏனைய சைவ நன் மக்களும் உதவிய நன்கொடைகளை கொண்டு இக்கோயிலைச் செங்கற்களால் கட்டி சுற்றிவர மதிலும் அமைத்தனர். சொறிக்கற்களே பாவிக்கப்பட்டன. இதனமைப்பு கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தோற்றத்தையே முற்றிலும் கொண்டதாய் அமைந்திருந்தது.

    19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் நொத்தாரிஸ் மூத்ததம்பி முதலியாரும், சிவஞானமுத்து விதானையாரும் பரிகாரி குஞ்சித்தம்பியும் வண்ணக்கமாராக அமைந்த காலத்தில் கோயிலுக்கு முன் பக்கம் இருப்பது போன்றது கட்டுவிக்கப்பட்டது. இவர்களே இவ்வாலயத்தின் பக்கத்தில் உள்ள விநாயக பெருமானின் தாயாகிய மாரியம்மன் ஆலலயத்தையும் கல்லால் கட்டுவித்தனர்.

    இக்கோயில் மூலஸ்தானத்தில் ஸ்தூபி அமைந்துள்ளது. முன்புறம் மண்டபங்கள் உண்டு. இக்கோயிலுக்குள் பரிவார மூர்த்திகளாக வைரவர், நாகதம்பிரான், மகாவிஷ்ணு, முருகன் ஆகியோர் அமைந்துள்ளனர். உட்பிரகாரத்தின் வடபுறம் ஒரு தீர்த்த கிணறும், தென்புறமாக மடப்பள்ளி அறைகளும் அமைந்திருக்கின்றன. அனைத்துக் கோயில்களுக்கும் அசையாமணிக் கோபுரம் முன்புறம் அமைந்திருக்க இக்கோயிலில் மட்டும் தென்திசையில் மணிக்கூட்டு கோபுரம் அமைந்திருப்பதை கண்ட அவர் எமது கோயிலிலும் இதே போன்று அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதற்குரிய காண்டாமணியை அங்கிருந்தே பெற்று வந்து இதனை தனது செலவிலே அமைத்தார். இதே போன்று இலங்கையிலே எந்தவொரு கோயிலும் அமைந்திருக்கவில்லை. இது இக்கோயிலின் சிறப்பம்சமாக கருதப்படுகின்றது. இதே போன்று தான் இந்திய முனிவரால் பாடப் பெற்ற தல முகமாக விளங்குவதும் மேலும் சிறப்பை தருகிறது.

    ஆரம்பகாலத்தில் இவ்வாலயம் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், எனும் மண்டபங்களை உடையதாக இருந்தது. இவற்றில் மகா மண்டபம் கட்டப்பட்டு நாட்டோடு வேயப்பட்டிருந்தது. தம்ப மண்டபம் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு நாட்டோடு வேயப்பட்டது. ஏனைய மண்டபங்கள் 20ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு கொழுக்கி ஓடுவேயப்பட்டது தற்போது அனைத்து மண்டபங்களும் கொங்கிறீட் தளம் (PLATE) போடப்பட்டுள்ளது.

    இவ்வாலயத்தில் மூன்றுகால பூசைகள் நடைபெறுகின்றது. வெள்ளிக் கிழமைகளில் மாலைப் பூசையை இக்கிராமத்திலுள்ள செங்குந்த குல மக்கள் குடும்பத்தினர் முறை வைத்து செய்து வருகின்றனர். சித்திரை வருடப்பிறப்பு, சித்திரைக்கதை, தீபாவளி, கந்தஷஷ்டி, விநாயகர் நோன்பு, விநாயகர் சதுர்த்தி, திருவெம்பாவை, தைப்பொங்கல், தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி போன்ற விஷேட பூசைகளும் நடைபெறுகின்றன. இக்காலங்களில் காசிகாண்டம், கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம், சிவராத்திரி புராணம், விநாயகர் காப்புக் கதை, சித்திரபுத்திரனார் கதை, கம்சன் கதை முதலியன பண்டைக்காலம் தொடக்கம் படிக்கப்பட்டு வந்தன. தற்போது காசிகாண்டம், கம்சன் கதை என்பன பாடுவதில்லை.

    விஷேட பூசைகள் காலத்தில் காப்பு விரதத் தீர்த்தம், மட்டக்களப்பு வாவியிலும் ஏனைய தீர்த்தம் யாவும் இந்து சமுத்திரத்தில் ஆடுவது வழக்கம். இக்கோயிலில் கொடியேற்ற திருவிழா செய்யும் முறை இன்று வரை உண்டாகவில்லை. (கோயில் அதிகார குழு) எனும் இக்குழு ஆலய பரிபாலன சபை காலத்திற்கு காலம் தெரிவுசெய்யப்படும். இவர்களை வண்ணக்கமார் குழு, பரிபாலசபையினர் என அழைக்கப்பட்டார்கள். இக்கோயிலுக்கு ஆரம்ப காலத்தில் நாகப்பரும் வைரவநாதரும், வண்ணக்குமார்களாக இருந்தனர். இவர்கள் கோயில் வளவுகளில் பெறப்படும் பிரயோசனங்களையும் ஊர் பொது மக்களிடம் பெறப்படும் மாதாந்த நன்கொடைப் பணத்தையும் கோயில் காணிக்கை வரும்படி பணத்தையும் கொண்டே பூசைகளையும், கோயில் குருக்களின் சகாய பணத்தையும் கொடுத்து வந்தனர். திருவிழா போன்ற விசேட பூசைகளுக்கு விசேட நன்கொடைகளை கிராம மக்களிடமிருந்து பெற்று நடத்தினர். அவ்வாறே தற்போதும் நடைபெற்று வருகிறது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொத்தாரிஸ் மூத்ததம்பி முதலியார், சி.ஞானமுத்து விதானையும், குஞ்சித்தம்பி வைத்தியர், இரத்தினேசர் என்போரும் வண்ணக்குமார்களாக இருந்து பல கட்டடங்களை கட்டுவித்தனர். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 1976ம் ஆண்டுவரை ஐந்து முறை வண்ணக்கர் தெரிவு இடம் பெற்று இருக்கிறது. இத் தேர்வுகளின் போது இடம் பெற்றோர் யாவரும் தமது கடமையை கவர்ந்து நின்றார்கள் எனலாம்.

    1917ம் ஆண்டுக்குப் பின் நெசவுத் தொழில் வீழ்ச்சியடைந்ததால் பொது மக்களிடமிருந்து நிதி திரட்டி கோயில் குருக்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாது போனமையால் நிர்வாகம் சரியாக இயங்கவில்லை. எனவே மூ. சிவசிதம்பரம் பிள்ளை விதானையாராகவும் நிலக்கிழாராகவும் இருந்த படியால் தம் சொந்த பணத்தை கோயில் குருக்களுக்கு சம்பளமாக கொடுத்து தமது மரண பரியந்தம் அதாவது 1935ம் ஆண்டுவரை அவரது மூத்தமகன் டாக்டர் சிவ.சோமசுந்தரம் அவர்களும் தமது சொந்த செலவில் ஐயரின் சம்பளத்தைக் கொடுத்து கோயிலை நிர்வகித்தனர்.

    1936ம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம் 1942ம் ஆண்டு வரை திரு.க. சபாபதிப்பிள்ளை விதானையாரும், வ. சின்னையா முதலியாரும், கா. சோம நாத முதலியாரும், ந. அழகேசமுதலியாரும் வண்ணக்கமாரர்களாக இருந்து கோயிலின் பெரும் பகுதியை முற்றாக இடித்து, புதிய திருத்தங்களைச் செய்து 21.11.1941 இல் கும்பாபிஷேகம் செய்வித்தனர்.

    1942ற்கு பின் க.சபாபதிப்பிள்ளை விதானையாரின் மரணத்தை அடுத்து திரு. முருகேசு செல்லத்துரை, பூபாலபிள்ளை சுப்பிரமணியம், நல்லதம்பி அழகேச முதலியார் என்பவர்கள் வண்ணக்குமார்களாக இருந்து கோயிலை பராமரித்து வந்தனர்.அதன்பின் 1949ம் வருடம் ஐப்பசி மாதம் 8ம் திகதி (08-10-1949) பின்வருவோர் ஆலய திருப்பணிச்சங்கம் எனும் பெயரில் தெரிவு செய்யப்பட்டனர். தலைவராக ஞானமுத்து செல்வநாயகம் ஆசிரியர் அவர்களும் இணைக்காரியதரிசிகளாக நல்லதம்பி அழகேச முதலியார் (J.p) அவர்களும் சிவசிதம்பரப்பிள்ளை விவேகானந்த முதலியார் ஆசிரியர் அவர்களும், தனாதிகாரியாக முருகேசு தருமலிங்கம் ஆசிரியர் அவர்களும் ஏனையோர் நிர்வாகசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் காலத்தில் ஆலய வளவான மெயின் வீதியில் அமைந்துள்ள இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டன. மேலும் கோயில் திருத்த வேலை, ஸ்தூபி வேலை, மடப்பள்ளி, மதில் செப்பனிடல், முன்மண்டபம் ஓலையால் அமைத்தது போன்ற வேலைகள் செய்யப்பட்டு 27-11-1957 ம் வருடம் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பிரதம சிவாச்சாரியாராக சிவஸ்ரீ. பொ. கந்தையா குருக்கள் (ஞான வைரவர் ஆலயம் உரும்பிராய்) அவர்களும் அக்காலத்தில் ஆலய பிரதம குருவாக இருந்த சிவஸ்ரீ. இ.கந்தசாமி குருக்களும் இணைந்து இதனை நடாத்தி வைத்துள்ளனர்.

    01-09-1959 ம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையம் ஆரம்பிப்பதற்காக காசிம் முகம்மது என்பவருக்கு குத்தகையாக ஆலய காணி வழங்கப்பட்டது. 1950ம் ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து 1953ம் ஆண்டு தை மாதம் வரை திரு.ஞா. செல்வநாயகம் ஆசிரியர் (தலமை வண்ணக்கர்) அவர்களின் சொந்த பணத்தில் குருக்களுக்கு சகாய பணம் கொடுத்து ஆலயத்தைப் பராமரித்து வந்துள்ளார். மேலும் 1957 ம் ஆண்டு இடம் பெற்ற ஆலய திருத்த வேலைகளிலும் பெரும்பாலான பணத்தை தன் சொந்த பணத்தில் செலவு செய்துள்ளார்.

    19.01.1960ம் ஆண்டு "ஆலய திருப்பணிச்சங்கம்" என இயங்கி வந்த இச்சங்கமானது "செங்குந்தர் தேவஸ்தான பரிபாலன சங்கம் ஆரையம்பதி” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தலைவராக ஞா. செல்வநாயகம் அவர்களும். செயலாளராக சு. தேவராச முதலி அவர்களும், பொருளாளராக மு. நாகமணி அவர்களும் ஏனையோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் 11-01-1962ம் வருடம் நியமன சாதனம் (ரஸ்த்தி) எழுதப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டார்கள். உறுதி இலக்கம் 1947, இவர்கள் ஆலய கருமங்களை சிறப்பாக கவனித்து வந்தார்கள்.

    16-05-1973ம் வருடம் இ. வடிவேலன் அவர்கள் தலைவராகவும், சி.விவேகானந்த முதலியார் செயளாலராகவும், மு.தர்மலிங்கம் அவர்கள் பொருளாளராகவும் அழகேச முதலியார் அவர்களும் சீ. சிவஞான முதலி அவர்களும் உதவியாளராக இருந்து ஆலயத்தை திருத்தி 1974ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்த வைத்தனர். அதன் பின்னரும் முன்னரும் எமது நிர்வாக சபையில் இருந்து தொண்டு செய்தவர்களின் பெயர்ப்பட்டியல் பின்னால் இணைக்கப்பட்டுள்ளது.

    09.04.1989ம் வருடம் கண.யோகராஜா தலைவராகவும் இரா.யோகேந்திரன் செயலாளராகவும், சீ.சிவஞானமுதலி பொருளாளராகவும் ஏனையோர் உறுப்பினர்களாகவும் இருந்து ஆலய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற வேளையில் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம், விநாயகர் ஆலய மதிலுடன் ஒன்று சேர்ந்து இருப்பது உகந்தது அல்ல என பல அறிஞர்களாலும் கூறப்பட்டது. அதனால் அதனை உடைத்து மாரி அம்மன் கோயிலை புதிதாக அமைத்து விஸ்வபிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் ஐயா அவர்களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இன்று அழகாக காட்சியளிப்பதை காணக்கூடியதாக உள்ளது. மேலும் இவ்வாலயம் ஆரம்பித்த காலத்திலிருந்து குடும்பங்கள் இணைந்த பாகை முறை சடங்காகவே மாற்றம் செய்து சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இவை இரண்டும் இக்காலங்களில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வாக கருதப்பட வேண்டியதாக உள்ளது.

    28.05.1994 தலைவராக சீ.சிவஞான முதலி அவர்களும். இணைச் செயலாளர்களாக செ.சோதி நாதன் அவர்களும், நா. புஸ்பநாதன் அவர்களும் பொருளாளர்களாக வி.அற்புதானந்த முதலியார் அவர்களும் ஏனையோர் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் ஆலயத்தை பரிபாலித்து வரும் காலத்தில் ஆலயம் சிதைவடைந்துள்ளதாலும், மூல விநாயகர் சிலை சேதமடைந்து இருப்பதாலும் ஆலயத்தை புனர் நிர்மானம் செய்யும் பொருட்டு 03-04-1996ம் வருடம் பாலஸ்தாபனம் விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் ஜயா அவர்களால் செய்யப்பட்டது. இதே காலத்தில் இங்கு ஆலய அர்ச்சகராக இருந்த சிவஸ்ரீ. வே. கருணாகரன் ஐயா அவர்களின் சேவை பற்றி குறிப்பிட வேண்டியதும் கடமையாகும். இவர்தான் ஓர் அர்ச்சகர் என்ற நிலையில் இல்லாமல் எமது இளைஞர்களுடன் தானும் ஒருவராக இணைந்து ஆலயத்தை முற்றாக இடித்து அள்ளும் பணியிலும் புணருத்தாரண பணியிலும் பங்கு கொண்டமையை நாம் அனைவரும் மறந்துவிட முடியாது. அத்துடன் அன்றிலிருந்து இன்று வரை இவ்வாலயத்தில் பூசை செய்தும் வருகின்றார்.

    27-08-1997 ம் வருடம் புதன் கிழமை ஆலய நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்ட்டு கட்டட வேலைகள் இடம் பெற்று வந்தன. அப்போது தலைவராக இருந்த பூசகர் சீ. சிவஞான முதலி அவர்களின் பங்களிப்பை நினைவு கூருதல் இவ்விடத்தில் சாலச்சிறந்தது. ஏனெனில் இன்று இவ்வாலயம் அழகாக அமைக்கப்பட்டடிருப்பதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11-06-2006 வரை தலைவராக இருந்து பணி செய்ததுடன் தற்போது போஷகராகவும் இருக்கின்றார்.

    11-06-2006 ம் வருடம் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. தலைவராக கலாநிதி. இரா.பத்மரஞ்சன் அவர்களும் செயலாளராக ச.மணிசேகரன் அவர்களும் பொருளாளராக நா.புஸ்பநாதன் அவர்களும் ஏனையோர் உறுப்பினர்களாகவும் போஷகர் களாக பூஷகர் சீ.சிவஞான முதலி அவர்களும் ஆசிரிய சிரோன்மணி த.செல்வநாயகம் அவர்களும் சட்டத்தரணி. வ. வினோபா இந்திரன் அவர்களும் டாக்டர். வா.ஞானரெட்ணம் அவர்களும் த.ராஜேஸ்வரன் (M.L.T) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் 2007ம் ஆண்டு பங்குனி உத்திரத்திற்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற இலக்கை வைத்து திருப்பணி வேலைகளை துரிதமாக செய்தனர். இருந்தும் குறித்த தினத்தில் இதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இக்காலத்தில் தலைவராக இருந்த அமரர். கலாநிதி.இரா.பத்மரஞ்சன் அவர்களின் பங்களிப்பு கூடியளவு இருந்ததையும் குறிப்பிட வேண்டியுள்ளது. மேலும் இக்காலத்தில் எல்லை வீதியிலிருக்கும் ஆலய வளவினுள் ஆறு கடைகள் கல்லால் கட்டுவிக்கப்பட்டது.

    03-06-2007ம் வருடம் தலைவராக இருந்த இரா. பத்மரஞ்சனின் மரணத்தை அடுத்து புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்து. அதில் தலைவராக கண.யோகராஜா அவர்களும் செயலாளராக ச.மணிசேகரன் அவர்களும் பொருளாளராக வி.பரிபூரணானந்த முதலியார் அவர்களும் உபதலைவராக த. பாலச்சந்திரன் அவர்களும் உபசெயலாளராக மா.யசோதரன் அவர்களும் உப பொருளாளராக சி.ஜினோரஞ்சன் அவர்களும் உறுப்பினர்களாக பொ.இந்திரலிங்கம், இரா.பிரதீபன், ப.லக்ஸ்மன் வி. அற்புதானந்த முதலியார், கு.யசோதரன், பா.பிரபாந்தன், செ.சோதிநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். கணக்குப் பரிசோதகராக ச.ரெட்ணராஜ் அவர்களும் நியமிக்கப்பட்டனர். கும்பாபிஷேகத்தை துரிதமான செய்ய வேண்டும் என்ற நோக்கோடு பின்வருவோர் கும்பாபிஷேக குழுவாக தெரிவு செய்யப்பட்டனர்.

    இரா.பிரதீபன், மா.யசோதரன், சி.ஜினோரஞ்சன், பொ.இந்திரலிங்கம், ப.காண்டீபன், கீ.சூரியகாந், பா. பிரபாந்தன், கு.யசோதரன், சி.பாலகுமார், நா.புஸ்பநாதன், வி.அற்புதானந்த முதலியார், திருமதி. சௌ சிவானந்தம், திருமதி. கோ. பாலசுப்ரமணிய முதலி இவர்கள் தங்கள் கால நேரத்தையும் உணவையும் பொருட்படுத்தாது செயற்பட்டதால் எதிர்பார்த்த தினத்தில் எம்பெருமானின் குடமுழுக்கு விமர்சையாக இடம்பெற்றது. இதே நேரத்தில் கலைச்சிற்பி பொ.இந்திரலிங்கம் அவர்களின் சேவையை நாம் இவ்விடத்தில் நினைவு கூருதல் எமது கடமையாகும்.இவர் ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கு அழகிய தேர் ஒன்றையும் மரத்திலான திருவாசி ஒன்றையும் சொந்த செலவிலும், சகடையை சில அன்பர்களின் உதவியுடனும் புதிதாக வடிவமைத்து கொடுத்தது மாத்திரமல்லாமல் விநாயகர் ஆலயத்திற்கான நான்கு மரக்கதவுகளையும் அழகாகவும் கூடிய விரைவிலும் எந்தவிதமான கூலியும் பெறாது செய்து தந்துள்ளார். மேலும் ஆலயத்தில் இடம் பெற்ற அனைத்து தச்சு வேலைகளையும் எவ்வித சிரமமும் பாராது கூலியும் பெறாது செய்து முடித்தமையும் நாம் குறிப்பிடத்தக்கது. அடுத்து ஆசிரிய சீரோன்மணி செல்வநாயகம் குடும்பத்தினர் ஆலய நிர்மான பணிகளுக்கு கூடியளவு நிதி வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

    நிதிமிகுந்தவர் பொற்குகை தாரீர் நிதிகுறை ந்தவர் காசுகள் தாரிர் அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்

    எனும் பாரதி பாடலுக்கு ஒப்ப செங்குந்தகுல மக்களினதும் ஏனைய சமூக சமய மக்களினதும் புலம் பெயர்ந்து அயல் நாடுகளில் வசிக்கின்ற மக்களினதும் பங்களிப்புடன் 12 வருடங்களின் பின் 11-02-2008 ம் வருடத் திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் சாகித்திய சிரோன்மணி வேதாகம வித்தியாபதி சிவாகம குருமணி குமார விக்கினேஸ்வர சிவாச்சாரியார் அவர்களின்

    தலைமையில் (சப்தரிஷி இந்து குருபீடாதிபதி கொட்டகலை ) மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது. இங்கு நடந்த மண்டலாபிஷேக பூசை இடம்பெற்று 14.03.2008 அன்று வெள்ளிக் கிழமை ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி இடம்பெற்று 1008 சங்குகளினாலும் பாற்குடங்களினாலும் சங்காபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது. இங்கு நடந்த மண்டலாபிஷேக பூசையினை பல அன்பர்களும் சிறப்பாக செய்து எம்பெருமானின் அருளைப் பெற்றுள்ளனர். இம்மாபெரும் காரியத்தை நிறைவு செய்ய உதவி செய்த அனைவரினதும் பெயர் குறிப்பிட முடியாவிட்டாலும் இவ்விடத்தில் நினைவு கூர்ந்து அவர்கள் அனைவருக்கும் எம் பெருமானாம் ஸ்ரீ திருநீலகண்ட விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

    நன்றி.

    “அன்பே சிவம் அதுவே நலம்”

    இவ்வரலாற்றை எழுதுவதற்குரிய உறுதுணையாக இருந்தவர்களுக்கும் உசாத்துணை நூல்கள் ஆசிரியர்களுக்கும் இதனை எழுதுவதற்கு உத்வேகம் கொடுத்தவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

    1) செங்குந்த பிரபந்ததிரட்டு

    2) மட்டக்களப்பு சைவக் கோயில்கள் - அமரர் வீ.சி.கந்தையா பண்டிதர்

    3) அமரர்.ஞானமுத்து செல்வநாயகம் (முன்னாள் வண்ணக்கர் அவர்களின் குறிப்புப் புத்தகம்)

    4) அமரர்.தமிழ்மணி சிவ.விவேகானந்த முதலியார்.

    (கோயில்குள ஆலய வரலாறும் விநாயகர் ஆலய குறிப்புகளும்)

    5) ஆலய கூட்டக்குறிப்பு பதிவுப் புத்தகங்கள்

    6) பூசகர்.சீ.சிவஞானமுதலி (போஷகர்)

    இவ்வண்ணம் இறைபணியில்

    சக்தி.திரு.வி.பரிபூரணானந்த முதலியார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments :

    Post a Comment

    Item Reviewed: கோயிலின் வரலாறு Rating: 5 Reviewed By: ADMiN
    Scroll to Top