728x90 AdSpace

Suthan
  • Latest News

    செங்குந்தர் வரலாறு

    மட்டக்களப்பு தமிழகத்தில் செங்குந்தரின் வருகையும் இருப்பும்

    மட்டக்களப்பு தமிழகத்தில் சமுக உருவாக்கம் உருவாகிய போது அன்று தொடக்கம் இன்று வரை நின்று நிலைக்கும் ஒரு முக்கிய சமுகக் கூறுகளுள் ஒன்றாக செங்குந்தர்களும் காணப்படுகின்றனர்.

    செங்குந்தர்கள் யார்? என்ற வினாவிற்கு இம்மலரிலே பல கட்டுரைகளில் பெயரிற்கான காரண காரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அதனை விடுத்து மட்டக்களப்பு தமிழகத்திற்கு இச்சமுகத்தினரின் வருகையைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பொன்றை தருவதே நோக்கமாகும்.

    இச்சமுகத்தினர் சோழர்களுடைய படைத்தளபதிகளாகவும் படைப்பிரிவுகளிலும் பல பணிகளை ஆற்றி அவர்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்த இச் சமுகத்தினர் சோழர்களுடைய ஆட்சிக் காலத்திலேயே சோழர்களின் தேவைகளுக்காக இடப்பெயர்வினை மேற்கொண்டிருக்க வேணடும். அல்லது சோழர்களின் வீழ்ச்சியின் பின் வேறு தேவைகளின் நிமித்தம் இடப்பெயர்வினை மேற்கொண்டிருக்க வேண்டும். இவ்வகையில் இக்கருதுகோள் பற்றிய மூன்று கருத்துக்களைச் சுருக்கமாக நோக்கலாம்.

    முதலாவது சோழர்களுடைய படைத்தளபதியாகவும், படை வீரர்களாகவும் விளங்கிய இவர்கள் இலங்கை மீதான சோழப்படையெடுப்பின் போது அவர்களுடனேயே வந்து அவர்கள் திரும்பிச் சென்ற பின் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறாயின் இவர்கள் சோழர் ஆட்சியில் தலைநகராக இருந்த பொலநறுவையில் அல்லது அதற்கு மிகக் கிட்டிய தூரத்திலேயே வாழ்ந்திருக்க வேண்டும். மாறாக மட்டக்களப்பிற்கு தெற்கே தான் இவர்களது குடியிருப்புக்கள் காணப்படுகின்றமை முக்கியமானது. யாழ்ப்பாணத்தில் வாழும் செங்குந்தர் நல்லூர் இராசதானியை அண்மித்த இடங்களிலேயே செறிந்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

    இவ்வகையில் சோழப்படைகளுடன் வருகைதந்த இவர்களில் பெரும்பாலானோர் சோழநாட்டிற்கு திரும்பிச் செல்ல சிறு தொகையினர் இங்கேயே தங்கி மட்டக்களப்பிற்கு தெற்கே கோட்டைக்கல்லாறு, ஆரையம்பதி, தாமரைக்கேணி ஆகிய இடங்களில் வாழ்ந்து தங்களின் குலத் தொழிலான நெசவையும், வைத்தியம், மாந்திரீகம் போன்றவைகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

    இரண்டாவது கல்விச் சக்கரவர்த்தி கம்பன் வேளாளரை சிறப்பித்து "ஏர் எழுவது” பாடியது போல தங்கள் குலத்தவரான கல்விச்சக்கரவர்த்தி, ஒட்டக்கூத்தர் தங்களின் குலப் பெருமையை பற்றிபாட வேண்டும் என செங்குந்த குல தலைவர்கள் பலர் ஒட்டக்கூத்தரைக் கேட்ட போது கூத்தர் செங்குந்த குலக் குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசு ஆயிரத்து எண்பர் பேரின் தலையைத் தர வேண்டும் என்றும் அவ்வாறு தந்தால் தான் பாடுவதாகவும் கூற அதற்குப் பயந்த பல குடும்பங்கள் மூன்று தோணிகளில் ஏறி இலங்கையை நோக்கி வந்ததாகவும் வரும் போது தோணி சுழல் காற்றில் சிக்கி ஒன்று யாழ்ப்பாணத்திலும், மற்றையது முல்லைத்தீவிற்கும், மூன்றாவது மட்டக்களப்பில் கோட்டைக் கல்லாற்றிற்கும் வந்து சேர்ந்ததாகவும் கூறுவர். அந்த மூன்று இடங்களிலும் இன்றும் செங்குந்தர் வாழ்வதனைக் காணலாம்.

    இந்தியாவில் வாழ்ந்த ஆயிரத்தெண்பர் பேரின் தலையைக் கொடுக்க ஒட்டக்கூத்தர் அதனை காளிகோயில் முன்றலில் ஈட்டி முனையில் குத்தி “ஈட்டி எழுபது” பாடியதும் பின் “எழுப்பெழுவது” பாடி அவர்களின் தலையை மீண்டும் உடலுடன் ஒட்டி உயிரெழுப்பினார் என்றும் வரலாற்றுக் கதை ஒன்று உண்டு. இதன் காரணமாக தமிழகத்து செங்குந்தருக்கும் மட்டக்களப்பு செங்குந்தருக்கும் நீண்ட காலமாக திருமண உறவுகள் நிகழவில்லை என்றும் அறிய முடிகிறது.

    கோட்டைக் கல்லாற்றில் குடியேறியவர்களை காலப் போக்கில் பஞ்சம், நோய் நொடிகளுக்கும் நகரமயமாக்கலுக்கும் உட்பட்டு அங்கிருந்து இடம் பெயர்ந்து ஆரையம்பதி, தாமரைக்கேணி ஆகிய இடங்களில் குடிபெயர்ந்தவர்களாவர். இவ்விரு கருத்துக்களுமே நீண்ட காலமாக இங்கு செங்குந்தர் மத்தியில் நிலைத்திருக்கின்ற கருத்துக்களாகும்.

    எனினும் அண்மைக்காலமாக ஒரு புதிய கருத்தும் முன்வைக்கப்பகின்றது. மட்டக்களப்பிற்கு சோழ இளவரசி சீர்பாத தேவியின் வருகையோடும் செட்டி, ஐயங்கார் முதலி என்ற சாதிப் பட்ட பெயர்களுடன் பலர் வந்து அவர்கள் அனைவரும் இணைந்து சீர்பாத சமுகம் என்ற ஒன்று உருவாகியமை குறிப்பிடப்படுகின்றது.

    மட்டக்களப்பில் முக்குவ சமூகம் கலிங்க இளவரசி உலகநாச்சியின் பெயரில் ஒரு குடி தோற்றம் பெற்றது போல சோழ இளவரசி சீர்பாத தேவியின் பேரில் சீர்பாத சமுகம் தோன்றியிருக்கலாம் என்பது சமுக ரீதியில் ஏற்றுக் கொள்ளத்தக்கது. இவ்வாறு சீர்பாத தேவியுடன் வந்த கண்ணப்ப முதலியின் பரம்பரையினராகவே இங்குள்ள செங்குந்த முதலி இருக்க வேண்டுமென சிவராம் குறிப்பிடுகின்றார்.

    செங்குந்தருக்கு சோழ அரசர்களே முதலில் பட்டத்தை வழங்கியதுடன் அவர்களுக்கு மிகவும் விசுவாசமானவர்களான செங்குந்தர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதும் கூறப்படுகின்றது. அவ்வகையில் சோழ இளவரசியுடன் வந்திருக்கலாம் என்பதற்கான வேறு ஆதாரங்களோ தொடர்புகளோ இதுவரை ஈழத்திலும் சரி தமிழகத்திலும் சரி கிடைக்கவில்லை என்பதுடன் தற்போது வரும் பெரும்பாலான செங்குந்த குல பெரியவர்கள் இக்கருத்துடன் உடன்பட மறுக்கின்றனர்.

    எவ்வாறாயினும் பல கருத்துக்களினூடே செங்குந்தர்கள் சோழர்களின் ஆட்சிக் காலத்திலேயே வருகை தந்து இன்று வரை நிலைத்து தனித்துவமிக்க சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    செங்குந்தர்களின் இருப்பு எனும் போது அவர்கள் குலத் தொழிலே ஆரம்பம் முதலே கைவிடத் தொடங்கி நொத்தாரிஸ் ஆசிரியர்கள் போன்ற அரச தொழில்களில் நாட்டம் செலுத்தி இன்று முற்று முழுதாக கைத் தொழில்களைக் கைவிட்டு கல்வி கற்ற சமுகமாக வாழ்கின்றார்கள் என்பதுடன் இன்றும் கோட்டைக் கல்லாறு, ஆரையம்பதி, தாமரைக்கேணி ஆகிய இடங்களில் வாழ்வதுடன் மூன்று இடங்களிலும் இன்று செங்குந்தர் வீதி என்ற ஒன்று இருப்பதையும் காண்பதுடன் மூவூர் செங்குந்தர்பளுக்குமிடையில் திருமண உறவு உட்பட மிக நெருங்கிய உறவு முறைகள் காணப்படுவதுடன் சகல நிகழ்வுகளிலும் பங்கு கொள்பவர்களாக விளங்குகின்றனர். அத்துடன் அன்று தொடக்கம் இன்றுவரை நீண்டதோர் கல்வி இலக்கிய பாரம்பரியத்தை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

    மற்றுமொரு விசேட அம்சம் யாதெனில் தமிழ் நாட்டிலுள்ள செங்குந்தர்கள் மத்தியில் காணப்படும் (5 உபபிரிவுகள்) உட்பிரிவுகளாகவோ, மட்டக்களப்பில் ஏனைய சமூகங்கள் மத்தியிலுள்ள குடி முறைமைகளாகவோ இவர்கள் மத்தியில் காணப்படாமல் ஒரே குலமாக செங்குந்தர் முதலிகள் அல்லது கைக்கோளர்கள் என்ற ஒரு குழுவாகவே வாழ்கின்றமை முக்கியமானது.

    ஆனால் ஒப்பீட்டு ரீதியில் இச்சமுகமானது அன்றிலிருந்து இன்று வரை சனத் தொகை உட்பட சகல துறைகளிலும், விடயங்களிலும் வீழ்ச்சியினை நோக்கி செல்வதனை மிக வருத்தத்துடன் அவதானிக்கலாம். மீண்டும் பீனிக்ஸ் பறவை போல இவர்கள் சாதி உணர்வுகளுக்கு அப்பால் சமுக விழிப்புக்காக எழுச்சி கொள்ள வேண்டும் என்பதே அனைவரினதும் அவா.

    உசாத்துணை நூல்

    1. செங்குந்தர் பிரபந்த திரட்டு

    2. தேஷ்டனின் குறிப்பு

    3. வ.சந்திரசேகரின் குறிப்புக்கள்

    4. தமிழ்மணி விவேகாநந்த முதலியாரின் குறிப்புக்கள்

    5. மட்டக்களப்பு வரலாறு அறிமுகம் - வெல்லவூர் கோபால்

    6. மட்டக்களப்பு தமிழகம் - வி.சி.கந்தையா

    7. சீர்பாதகுல வரலாறு அருள் செல்வநாயகம்

    8. டி.சிவராமின் கட்டுரை

    ச.மணிசேகரன் (ஆசிரியர்)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments :

    Post a Comment

    Item Reviewed: செங்குந்தர் வரலாறு Rating: 5 Reviewed By: Admin
    Scroll to Top