ஆண்டுக்கு ஒருமுறை இடம் பெயரும் குரு பகவானின் அருள் நமக்கு அந்த ஓராண்டுக்குதான். ஆனால், குரு மகான்களின் அருளோ, வாழ்நாள் முழுவதும் தொடரும். அத்தகைய மகான்கள் சிலரின் தரிசனம் இங்கே-
காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் பகவன் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். ஒரு மடாதிபதியாக காஞ்சிபுர மடத்தில் அவர் தங்கியிருந்த காலத்தைவிட வெளியே பயணித்து, நாம ஜப மேன்மையைப் பரப்பிய காலமே அதிகம் என்று சொல்லலாம். நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு என்று போற்றப்படுவர் அவர். புராணம் போற்றும் புண்ணிய நகரம் காஞ்சிபுரத்தில், மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்கன். ஆந்திர தேசத்தில் இருந்து காஞ்சிக்கு வந்து குடியேறியவர். அவருடைய மனைவியின் பெயர் சுகுணா. இந்தத் தம்பதிக்கு 1638ல் ஆதிசங்கர பகவத்பாதரின் அம்சமாக போதேந்திரர் அவதரித்தார்.
குழந்தை பிறந்த வேளையை வைத்து, அதன் எதிர்காலத்தையும் சிறப்பு அம்சங்களையும் கணித்த பாண்டுரங்கன், புருஷோத்தமன் என்று பெயர் சூட்டினார். அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58வது பீடாதிபதியாக விளங்கிய ஆத்மபோதேந்திரர் என்கிற விஸ்வாதிகேந்திரா சரஸ்வதி ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள், தந்தை மடத்துக்குப் புறப்படும்போது, நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான புருஷோத்தமன், சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு ஸ்ரீமடத்துக்குச் சென்றார். பீடத்தில் இருந்த ஸ்வாமிகளைக் கண்டதும். பக்தி உணர்வு மேலிட, எவரும் சொல்லாமல் தானாகவே நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன்.
விளையும் பயிரின் சாதூர்யம், ஒரு வேதவித்துக்குத் தெரியாமல் இருக்குமா? ஸ்வாமிகள், புருஷோத்தமனைப் பார்த்து புன்னகைத்தார். ஸ்வாமிகள் முன் கைகூட்டி, வாய் பொத்தி நின்றிருந்தது குழந்தை. பாண்டுரங்கனைப் பார்த்து ‘இந்தக் குழந்தை யாருடையவன்?’ என்று கேட்டார் ஸ்வாமிகள். ‘தங்களுடைய பரிபூரண ஆசீர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதே’ என்று பவ்யமாக பதிலளித்தார் பாண்டுரங்கன். ‘நம்முடையது என்று நீர் சொல்வதால், இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத்தர முடியுமா?’ ஸ்வாமிகள் அழுத்தமாக் கேட்டார்கள்.
யதேச்சையாக, தான் சொன்ன வார்த்தைகளின் முழுப்பொருள் அப்போதுதான் பாண்டுரங்கனுக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார். வாய் தவறி வார்த்தைகளை உதிர்த்துவிட்டோமோ என்று ஐயப்பட்டார். இருந்தாலும், அந்த வார்த்தைகள் வெளிப்பட்டதும் இறைவனின் சங்கல்பமே என்று தீர்மானித்தார். ஸ்வாமிகளைப் பணிந்து ‘தங்களுடைய விருப்பமே என் விருப்பமும்’ என்றார். இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்வாமிகள், ‘நல்லது. இன்றைய தினத்தில் இருந்து மடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன் பாவிக்கப்படுவான். தைரியமாகச் செல்லுங்கள்,’ என்றார். கணவரின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா கலங்கவில்லை.
பகவானின் விருப்பம் அதுவானால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று தன்னையும் தேற்றிக்கொண்டு கணவரையும் தேற்றினாள். மடத்தில் வளர்ந்தாலும் தினமும் பெற்றோரைச் சந்தித்து நமஸ்கரித்து ஆசி பெறும் உயரிய வழக்கத்தைக் கொண்டிருந்தான் புருஷோத்தமன். ஐந்து வயதில் அட்சராப்பியாசம்; ஏழு வயதில் உபநயனம், பதினாறு வயது முடிவதற்குள் வேதம், வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்றுத் தேர்ந்தான். சகலத்திலும் உயர்ந்தது நாராயணன் நாமமே என்று தெளிந்த புருஷோத்தமன், தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் ராம நாமத்தை ஜபிப்பதாக, ஆசார்யார் சந்நதியின் முன் சங்கல்பம் எடுத்துக்கொண்டான். (அதன்பின் கடைசிவரை இதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வந்தார்).
அடுத்தடுத்து வந்த காலகட்டத்தில் புருஷோத்தமனின் பெற்றோர், ஒருவர் பின் ஒருவராக இறைவனின் திருப்பாதம் அடைந்தனர். நாளாக நாளாக புருஷோத்தமனின் தேஜஸும், பவ்யமும் கூடிக் கொண்டே வந்தன. ஆசார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் விஸ்வாதிகேந்திரர். உரிய காலம் வந்ததும் அவனைப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்க விரும்பினார் ஸ்வாமிகள். அதற்குரிய வேளையும் வந்தது. ஒரு தினம் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத்திரை புறப்பட்டார். அப்போது புருஷோத்தமனும் உடன் வருவதாகச் சொன்னார். ‘‘காசியில் சில காலம் தங்க உத்தேசித்துள்ளேன்.
எனவே, நீ இப்போது என்னுடன் வர வேண்டாம். சிறிது காலத்துக்குப் பிறகு புறப்பட்டு வா,’’ என்றார் ஸ்வாமிகள். புருஷோத்தமனும் ஸ்வாமிகளைப் பிரிய மனம் இல்லாமல் ஒப்புக்கொண்டான். ஸ்வாமிகள் காசியை அடைந்தார். அப்போது, ந்ருஸிம்மாச்ரமி ஸ்வாமிகள் என்னும் மகான் காசி க்ஷேத்திரத்தில் தங்கி, பகவன் நாமங்களைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சந்தித்து உரையாடி, ஆன்மிக விவாதங்களை மேற்கொண்டனர். அப்போது, சங்கீர்த்தன வைபவங்கள் அதிக அளவில் காசியில் நடந்ததைப் பார்த்து ஸ்வாமிகள் பெருமிதம் கொண்டார். இந்த அளவுக்குத் தென்னாட்டில் நாம சங்கீர்த்தனம் வளர வேண்டுமானால் அது புருஷோத்தமனால்தான் முடியும். விரைவிலேயே அவனுக்கு மடாதிபதி பட்டம் சூட்டவேண்டும் என்று முடிவெடுத்தார்.
குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தன் நண்பனுடன் காசிக்கு யாத்திரை சென்றான் புருஷோத்தமன். அங்கே புருஷோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் பெருமகிழ்வு கொண்டு, அவனை அணைத்து சந்தோஷப்பட்டார் ஸ்வாமிகள். இருவரும் காஞ்சிபுரம் திரும்பிய பின், ஒரு சுபதினத்தில் புருஷோத்தமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக ஆக்கினார் ஸ்வாமிகள். அப்போது புருஷோத்தமனுக்கு ஸ்வாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் போதேந்திரர். ஏராளமான கிரந்தங்களை இயற்றினார். விளக்கவுரைகள் எழுதினார்.
கோவிந்தபுரத்தில் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் காவிரி நதி! கோடை அல்லாத காலங்களில் கொப்பளித்துக் கொண்டும் சுழித்துக் கொண்டும் ஓடும் அந்த நதியின் அழகை ரசிப்பதற்கும் அங்கே கூடும் சிறுவர்களுடன் விளையாடுவதற்காகவும் காவிரிக் கரைக்கு அடிக்கடி செல்வார் ஸ்வாமிகள். மணற் பகுதியில் இருந்த குழி ஒன்றுக்குள் தான் இறங்கிக்கொண்டு மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களிடம் கூறினார் ஸ்வாமிகள். சிறுவர்கள் ஆனந்தமாக மணலை அள்ளிப் போடுகிற நேரம் பார்த்து, ‘‘ஏ பசங்களா! என் மேல் மணலை அள்ளிப் போட்டு மூடிவிட்டு, நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போய்விட வேண்டும். வீட்டில் எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது. நாளை பொழுது விடிந்ததும் இங்கே வந்து என்னைப் பாருங்கள்,’’ என்றார்.
ஸ்வாமிகள் விளையாடுகிறார் என்று நம்பிய அந்த அப்பாவிச் சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு. குழிக்குள் மணலை நிரப்பினார்கள். ஸ்வாமிகளது உருவம் மறைந்துவிட்டது. மறுநாள் காலை தங்களது அன்றாட அலுவல்களின் பொருட்டு ஸ்வாமிகளைத் தேடினர் அவரது சிஷ்யர்கள். ஆசி பெற வேண்டி ஊர் மக்கள் ஸ்வாமிகளைத் தேடி வந்தனர். இப்படிப் பலரும் ஸ்வாமிகளைத் தேடிக் கொண்டிருக்க... அவரைக் காணவில்லை என்கிற தகவல் பரவியதும் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஸ்வாமிகளுடன் ஆற்றங்கரையில் அடிக்கடி விளையாடும் சிறுவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் பெரியோர்கள். அப்போதுதான், முந்தைய தினம் நடந்த சம்பவத்தின் வீரியம் அந்தச் சிறுவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.
கண்களில் நீர் கசிய ஸ்வாமிகளின் மேல் மணலைப் போட்டு மூடிய விவரத்தைத் தேம்பித் தேம்பிச் சொன்னார்கள். சீடர்களும் ஊர்க்காரர்களும் பதறிப்போய் ஆற்றங்கரைக்கு ஓடினார்கள். சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில், மேடாக இருந்த மணலைக் கைகளால் விலக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அசரீரி வாக்கு ஒன்று எழுந்தது. ‘‘பக்தர்களே! நாம் இந்த இடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்துகொண்டு ஜீவன் முக்தராக விளங்குவோம். அதோடு, உலக நன்மைக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே இருப்பதால், நமக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம். தோண்டுவதை நிறுத்துங்கள்.
இதற்கு மேலே பிருந்தாவனம் ஒன்றை அமைத்துத் தினமும் ஆராதித்து வாருங்கள். ஒவ்வொரு நாளும் லட்சத்துக்கு எட்டாயிரம் நாம ஜபம் செய்கிற பக்தர்களுக்கு நாம் தரிசனம் தருவோம்,’’ என்று அந்தக் குரல், ஸ்வாமிகளின் மொழியாக ஒலித்தது! இந்த அசரீரி வாக்கைக் கேட்ட அவருடைய பக்தர்களும் சீடர்களும் அதற்கு மேல் தோண்டாமல் மண்ணைப் போட்டு மூடி விட்டார்கள். அவர் மீது கொண்ட குருபக்தி காரணமாக சில பக்தர்கள். ஆற்று மணலில் விழுந்து தேம்பி தேம்பி அழுதனர். இன்னும் சிலரோ, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர். ஸ்வாமிகள் நிரந்தரமாகக் குடிகொண்ட இடத்தில் அவரது அசரீரி வாக்குப்படியே ஒரு துளசி மாடம் அமைத்து, மகா அபிஷேகம் நடத்தி, தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தனர் அவரது பக்தர்கள்.
ஆற்றங்கரை மணலுக்குள் ஸ்வாமிகள் ஐக்கியமான தினம் கி.பி.1692ம் வருடம் புரட்டாசி மாதம் பவுர்ணமி. இப்போதும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பவுர்ணமியில் ஆரம்பித்து. மகாளய அமாவாசை வரை பதினைந்து நாட்கள் ஆராதனை உற்சவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குவிகிறார்கள். ஜீவசமாதியில் இருந்துகொண்டு போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றைக்கும் நாமம் ஜபித்துக்கொண்டு தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்கு அருள்கிறார். அவரது அதிஷ்டானத்தில் இருந்து வரும் அவரது ராம நாம குரலை இன்றைக்கும் கேட்க முடிகிறது என்கிறார்கள்.
சிதம்பர சுவாமிகள்
பாண்டிய நாட்டில் மதுரையம்பதியில், சங்கப்புலவர் மரபில் தோன்றியவர் சிதம்பர சுவாமிகள் என்கிற சிதம்பரத் தேவர். இளமையிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரது புலமையைப் பாராட்டி கவிராயர் என்று பட்டமளித்துச் சிறப்பித்தனர். இலக்கியப் புலமையோடு தெய்வ பக்தியும் இவரிடம் மிகுந்திருந்தது. மதுரை அரசாளும் மீனாட்சியம்மையைத் தம் உபாசனா மூர்த்தியாகக் கொண்டு, பூஜித்து வந்தார். குமாரதேவர் என்பவரை குருவாக ஏற்று வேதாந்தம், யோகசாதனம் போன்றவற்றைப் பயின்றார். வீரசைவ ஆகம முறைப்படி குருவிடம் இருந்து தீட்சை பெற்று உபதேசமும் கிடைக்கப் பெற்றார். ஒருநாள் சிதம்பரதேவர் தியானத்தில் இருந்தபோது ஒரு மயில் தோகை விரித்து ஆடக் கண்டார்.
அதன் விளக்கத்தைத் தமது குருவிடம் கேட்க, உமது உபாசனா தேவியாகிய மதுரை அங்கயற் கண்ணி இதனை விளக்குவாள் என்றார் அவர். உடனே, மதுரை மீனாட்சியம்மனை தரிசிக்க ஓடினார் சிதம்பரத் தேவர். மீனாட்சியம்மை கலிவெண்பா என்னும் பாமாலையை அம்பிகைக்குச் சூட்டினார். 45 நாள் முடிவில் சிதம்பரதேவருக்குக் காட்சி தந்தாள் அன்னை. அதோடு, ‘வடக்கே யுத்தபுரி (திருப்போரூர்) சென்று, அங்கே எம் புதல்வன் குமரனது ஆலயத்தைப் புதுப்பித்துப் பொலிவடையச் செய்வாயாக!’ என்றும் அருள்பாலித்தாள். மீனாட்சியின் ஆணையை ஏற்ற சிதம்பரதேவர், அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் சென்றார். திருப்போரூரில் அவர் முதன் முதலாக தரிசித்தது வேம்படி விநாயகரை!
தொட்ட காரியம் வெற்றி பெற விநாயகரின் துணை வேண்டுமே! அதனால், விநாயகரின் அனுகிரகத்தை முதலில் பெற்ற பிறகு, அன்னை மீனாட்சி குறிப்பிட்ட கந்தன் ஆலயத்தைத் தேடும் முயற்சியை மேற்கொண்டார். அப்போதெல்லாம், திருப்போரூரில் காணும் திசையெங்கும் பனங்காடாகவே இருந்தது. அந்தக் காட்டில் கந்தனைத் தேடி அலைந்தபோது, ஒரு பனைமரத்தின் கீழே சுயம்பு மூர்த்தியாக கந்தவேள் காட்சி அளிப்பதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார். வேம்படி விநாயகர் கோயிலில் தங்கி, அங்குள்ள வள்ளையார் ஓடை என்னும் குளத்தில் தினமும் நீராடி, கந்தனை வழிபட்டு வந்தார் சிதம்பரதேவர். இப்படி இருக்கையில்தான், கந்தனுக்கு கோயில் எழுப்புவதற்கான சந்தர்ப்பமும் தேடி வந்தது.
வழிப்பறிக் கொள்ளையர் சிலர், சிதம்பரத் தேவரிடமும் தங்களது கைவரிசையைக் காட்ட முயன்றனர். முருகப்பெருமான் சும்மா இருப்பாரா? திருட வந்தவர்களுக்கு பார்வை பறிபோனது. தவற்றை உணர்ந்து சிதம்பரத் தேவரின் காலில் விழுந்து கதறி அழுதனர். ‘கொள்ளையடிப்பதை இன்றோடு விட்டுவிடுங்கள். திருடிச் சேகரித்த பொருளை, இங்கு அமையப்போகும் கந்தன் ஆலயத் திருப்பணிக்குக் காணிக்கையாக அளியுங்கள். முருகன் உங்களுக்கு மீண்டும் பார்வையை வழங்குவார்,’ என்றார் சுவாமிகள். இந்நிலையில் ஒருநாள், சிதம்பரத் தேவரைக் காண நேரில் வந்தார் முருகப்பெருமான். அதுவும், தேவரின் குருவான குமாரதேவர் உருவில்!
குருதான் வந்திருக்கிறார் என்றெண்ணி மகிழ்ந்து, அவரை வரவேற்றார் சிதம்பரதேவர். தாம், திருப்போரூர் வந்த கதையையும் சொன்னார். குமாரதேவர் வடிவில் வந்த குகப் பெருமான், தமது திருக்கரத்தால் சிதம்பரத் தேவரது நெற்றியில் திருநீறிட்டு நயன தீட்சை (பார்வையால் அனுகிரகம்) செய்தார். அப்போது, முன்பு அங்கே முருகனின் ஆலயம் இருந்த அமைப்பு, சிதம்பரத் தேவர் மனக்கண் முன் காட்சியளித்தது. குருவின் வருகையையும், அதனால் தனக்குள் உண்டான மாற்றத்தையும் கண்டு வியந்தார் சிதம்பரத் தேவர். அது பற்றிக் குருவிடம் கேட்க முயன்றபோது, அவர் சட்டென்று அங்கிருந்த சுயம்பு மூர்த்தியினுள் புகுந்து மறைந்தார்.
அதைக் கண்ட சிதம்பரத்தேவர், கந்தனே குரு வடிவில் வந்ததை அறிந்து பேரானந்தம் கொண்டார். விரைவில் கோயில் கட்டும் திருப்பணிகளைத் தொடங்கினார். கண்ணுவப்பேட்டையில் தமக்கென்று பூஜை மடம், ஒடுக்க அறை முதலியனவற்றையும் அமைத்துக் கொண்டார். மூலவர் சந்நதி அருகில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கி இவர் அமைத்த யந்திர ஸ்தாபனம் மிகவும் பெருமை வாய்ந்தது. வேறு எந்த முருகன் ஆலயத்திலும் காண இயலாத இந்த அமைப்பை சுவாமிகள் இங்கே அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கூர்மம், அஷ்ட கஜங்கள் (எட்டு யானைகள்) அஷ்ட நாகங்கள், தேவ கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இந்தச் சக்கரத்தை அமைத்துள்ளார். இதற்கான விசேஷ பூஜை முறைகளை சுவாமிகளே ஏற்படுத்தியுள்ளார்.
மருதாநல்லூர் சுவாமிகள்
நாமபஜனையில் பாகவதர்களின் கீர்த்தனைகளை வரிசைப்படுத்தி, மிருதங்கம் போன்ற வாத்தியங்களை இசைத்து மனதை ஒருமுகப்படுத்தி புனிதமான இறைவழிபாட்டு முறையை மேம்படுத்தியவர் சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள். சீதா கல்யாணம், ராதாகல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பஜனை சம்பிரதாயங்களை உருவாக்கி, மருதாநல்லூர் பாணி என்று போற்றப்படும் அளவிற்கு அதை மக்களிடையே பரப்பியவர். 1777 முதல் 1817 வரை வாழ்ந்தவர். வேதத்துடன் ராமகாவியத்தையும் திரும்பத் திரும்பச் சொல்லி மனதில் பதிய வைத்துக்கொண்டார். இதனால், தன்னையே ஸ்ரீராமனாக பாவித்துக் கொண்டார். பாகவதர்களின் இருப்பிடமாகிய திருவிசை நல்லூரில் வசித்த இவருக்கு, சிறுவயதிலேயே இவரது தாயார் பல மகான்களின் கதைகளைச் சொன்னார்.
தன் தந்தைக்கு சிராத்தம் முதலான வைதீக காரியங்களில் அவருக்கு உதவி வந்தார். ஒருநாள் பக்கத்து ஊருக்கு சிராத்தம் செய்ய சென்றபோது, ராம நாம ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார். காலையில் ஆரம்பித்த ஜபம் மாலையில் தான் முடிந்தது. சிராத்தம் பற்றிய நினைப்பு வந்தவுடன், ஓடிச்சென்று அந்த வீட்டுக்காரரை பார்த்து மன்னிப்பு கேட்க முயற்சி செய்தபோது, நீங்கள் இன்று வெகுநன்றாக சிராத்தம் செய்து வைத்தீர்கள் என்று சொன்ன தைக் கேட்டு, பகவத் அருளை நினைத்து திகைத்து நின்று விட்டார். இவர் ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தந்தையார் இறந்த பிறகு, குடும்பத்தை நடத்த, பக்கத்து ஊருக்குச் சென்று குழந்தைகளுக்கு வேதம் சொல்லித் தந்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களுக்கு படிப்பு நன்றாக வந்ததால், இவரது புகழ் எங்கும் பரவியது. கூட்டம் பெருகியது.
இது இவரது ஜப வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்தது. எனவே, தம் சொத்துகளை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு ராம ஜபம் செய்யும் ஆசையில் அயோத்திக்கு புறப்பட்டு விட்டார். உஞ்சவிருத்தி எடுத்து நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே ஆந்திராவுக்கு வந்து விட்டார். திருப்பதி செல்லும் பக்தர்கள் ஒரு குழுவாக அமர்ந்து ஸ்ரீராமன் பெயரைச் சொல்லி ஆடிப்பாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த பக்தி முனைப்பைக் கண்டதும், வடக்கே இருந்த சம்பிரதாயங்களையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் ஒன்றாக இணைத்து புதிதாக நாம சங்கீர்த்தன முறையை உருவாக்க எண்ணினார். அன்று இரவில் போதேந்திரர் கனவில் தோன்றி, ‘உன் பிறப்பின் நோக்கத்தை அறிந்த பிறகும் அயோத்திக்கு ஏன் செல்கிறாய்?
உன் ஊருக்குச் சென்று நாமசங்கீர்த்தனத்தை பரப்ப ஏற்பாடு செய்,’ என்றார். உடனே, சுவாமிகள் மருதாநல்லூர் திரும்பி விட்டார். ஜெயதேவரின் கீதகோவிந்தம், போதேந்திர சுவாமிகள், ஐயர்வாள், பத்ராசலம் ராமதாசர் போன்ற மகான்களின் பாடல்களை ஒன்றிணைத்து ஒரு அழகான நாமசங்கீர்த்தன முறையை உருவாக்கினார். அதை அந்த ஊரில் உள்ள எல்லா பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கற்றுத் தந்தார். மருதாநல்லூரில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார். இதன்பிறகு, சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். போதேந்திர சுவாமிகளின் சமாதியை பார்க்க, இவர் கோவிந்தபுரம் சென்றபோது, சமாதி எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை.
அவரது சமாதியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் 9 நாட்கள் உண்ணாமல், உறங்காமல், அசையாமல் ராமநாம ஜபம் செய்தார். 10வது நாள் உத்வேகம் வந்தவராய், காவிரியாற்று மணலில் பல இடங்களில் காது வைத்து கேட்க, ஓரிடத்தில் சிம்ம கர்ஜனையாக ‘ராம் ராம்’ என்ற நாமம் காதில் கேட்டது. அந்த இடமே மகான் ஜீவசமாதி அடைந்த இடம் என்பதை அறிந்த சுவாமிகள் தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் அங்கே ஒரு பிருந்தாவனம் அமைக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகள் சரபோஜி மன்னரைத் தேடிச் செல்வதற்கு முன்னதாக ஒருநாள், மன்னரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, ‘உன்னைத் தேடி ராமச்சந்திரமூர்த்தி வந்துள்ளார்,’ என்று சொன்னார்.
இதனால் சரபோஜி மன்னர், சுவாமிகளின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார். மருதாநல்லூர் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை அவர் உஞ்சவிருத்தி எடுத்துவந்தபோது, பாலகலோசன் என்பவர் அவரை அவமரியாதை செய்தார். இதனால் அவருக்கு வயிற்றுவலி வந்து அவஸ்தை அதிகமானது. அவரது மனைவி சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டு தீர்த்தம் பெற்றார். அதை கணவருக்கு அளித்தாள். வயிற்றுவலி நீங்கிய பாலகலோசன் அவரது சீடரானார். அந்த சீடர் எழுதிய, ‘அதடே பரபிரும்மம்...’ என்ற பாடல் குருவணக்கமாக பாடப்படுகிறது. 1817ல், ராமநவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி சந்நதியில் இறைவனுடன் ஐக்கியமானார் மருதாநல்லூர் சுவாமிகள்.
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்!
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் தந்தையார் பெயர் - கந்தசாமி ஐயா, தாயாரின் பெயர் - அர்த்தநாரி அம்மை. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) இவர்களது சொந்த ஊர். பிற்பாடு இவர்கள் அங்கிருந்து கோவை மாவட்டத்தில் உள்ள மஞ்சம்பாளையத்துக்குக் குடிபெயர்ந்து அங்கே வசிக்கத் தொடங்கினர். பெல்லாரியில் செள்ளகுரிக்கி என்கிற இடத்தில் வசித்து வந்த எரிதாதா சுவாமிகளின் சீடராக சில காலம் இருந்து அவரது உத்தரவுப்படி தென்னாடு (கும்பகோணம்) வந்தவர் பாடகச்சேரி சுவாமிகள். பாடகச்சேரியில் பல ஆண்டுகள் இருந்தமையால் இந்தப் பெயர். நேபாள மன்னரும் பைரவ உபாசகருமான ராஜா ராம் சுவாமிகள், இவருக்கு உபதேசம் செய்து வைத்தார்.
பாடகச்சேரியில் தான் இருந்த காலத்தில் பைரவ வழிபாட்டை தினமும் நடத்தி மகிழ்வாராம், சுவாமிகள். பைரவ வழிபாடு என்பது ஏதோ பூஜை, புனஸ்காரம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. தினமும் ஏராளமான நாய்களைக் கூப்பிட்டு சாப்பாடு போடுவது! சுவாமிகளின் கருத்துப்படி இவை எல்லாம் நாய்கள் அல்ல, நாய் உருவில் இருக்கும் தேவர்கள் என்பாராம் சுவாமிகள். பைரவ வழிபாட்டுக்கு முதல் நாள் மாலை பாடகச்சேரிக்கு அருகில் இருக்கும் ஆலங்குடி, செம்மங்குடி, புளியங்குடி, அம்ருதவல்லி போன்ற கிராமங்களுக்குச் சென்று அங்கு இருக்கும் நாய்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு வருவாராம் சுவாமிகள்! மறுநாள் மதியம் சுமார் முந்நூறு பேருக்கு சமையல் தயாரிக்கச் சொல்வார்.
வடை, பாயசம் என்று சமையல் திமிலோகப்படும். ‘இவ்வளவு பேருக்கு சாப்பாடு சொல்கிறாரே, யார் வந்து சாப்பிடப் போகிறார்கள்? இந்தப் பகுதியே பொட்டல்காடாயிற்றே!’ என்று சமையல் செய்யும் அன்பர்கள் ஆரம்பத்தில் குழம்பினார்களாம். பின்னர்தான், விவரம் அறிந்து வியந்தார்கள். சமையல் முடிந்ததும். அந்த இடத்தில் வாழை இலையை விரித்து. மனிதர்களுக்குப் பரிமாறுவது போல் சமைக்கப்பட்ட அனைத்து பதார்த்தங்களும் வைக்கப்படும். தன் கையில் வைத்திருக்கும் ஒரு கோலால் தரையைத் திடீரென்று சுவாமிகள் தட்டிய மாத்திரத்தில், எங்கிருந்துதான் வருமோ தெரியாது, நூற்றுக்கணக்கில் நாய்கள் வந்து இலையின் முன்பாக சமர்த்தாக அமர்ந்து கொள்ளும்.
இதை வேடிக்கை பார்க்க வந்திருக்கும் கிராமவாசிகளுக்கு இவை எல்லாம் நாயாகத் தெரியுமே தவிர, சுவாமிகளுக்கு மட்டும் அனைத்தும் மனிதர்களாகவே தெரிவார்களாம். தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டியும் நோய்கள் அகல வேண்டியும் சுவாமிகளிடம் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ‘ஆபத்சகாயம்...’ என்று சொல்லி அவர்களது நெற்றியில் திருநீறு பூசுவார். அவ்வளவுதான், அடுத்த நொடியே அவர்களை பீடித்திருந்த பிணிகள் பஞ்சாகப் பறந்துவிடும். தனது 12 வயதில் சுவாமிகள் பாடகச்சேரிக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது.
எரிதாதா சுவாமிகளின் அறிவுரைப்படி இங்கே வந்ததும் பட்டம் என்கிற கிராமத்தில் மாடு மேய்க்கும் பணியை மேற்கொண்டார். பாடகச்சேரியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கும் கிராம-பட்டம் என்ற கிராமத்தில் இருந்தபோதுதான் சூட்சும ரூபமாக வடலூர் வள்ளலார் சுவாமிகள் வந்து ஞான உபதேசம் செய்து வைத்ததாக பாடகச்சேரி சுவாமிகளின் பக்தர்கள் சொல்கிறார்கள். நவகண்ட யோகம் சுவாமிகளுக்கு அப்போதுதான் சித்தி ஆகி இருந்தது. அதாவது, உடலை ஒன்பது பாகங்களாக - துண்டு துண்டாக்கும் ஒரு சித்து வேலை அது.
சுவாமிகள், கடைசி காலத்தில் தான் இருந்த கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்திலேயே சமாதி ஆகவேண்டும் என்று விரும்பினாராம். ஆனால், அவரின் சென்னை பக்தர்கள் சிலர் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 1949ம் வருடம் அம்பாளுக்கு உரிய ஆடிப் பூர தினத்தில் திருவொற்றியூரில் ஜீவ சமாதி ஆனார். சுவாமிகள் தன் பக்தர்களுக்கு அருளிய உபதேசம் என்ன தெரியுமா? ‘‘நான் மறைந்தாலும், என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!’’
படே சாஹிப்
விழுப்புரம் - புதுச்சேரி பிரதான சாலையில் (வில்லியனூர் வழி) உள்ளது கண்டமங்கலம். விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலிருந்து தலா 20 கி.மீ. கண்டமங்கலம் ரயில்வே கேட் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. பயணித்தால் சின்னபாபு சமுத்திரம் என்கிற ஊர் உள்ளது. இங்குதான் மகான் ஸ்ரீபடே சாஹிப் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா அடையாளங்களையும் துறந்தவர் இவர். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். சாயபு என்பது பொதுவான பெயர். படே என்றால் உயர்ந்த என்று பொருள். உயர்ந்த உத்தமமான மகான் என்கிற பொருளில் இவர் படே சாயபு என்று அழைக்கப்பட்டு வருகிறார். மகான் படே சாஹிப் எவரிடமும் பேசியதில்லை.
எப்போதும் மௌனம்தான். தன் வாழ்நாளில் இவர் காத்து வந்த மௌனம், இவருடைய தியானத்துக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. தன் வாழ்வில் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். மகானின் அருள் பெற்றுத் திரும்பிய பலரின் வாழ்வும் ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்தது. அவரது ஆசீர்வாதத்தால் நோயாளிகள் குணமடைந்தனர். தீரவே தீராது என்று பலர் அனுபவித்து வந்த நோய்கள், இவரது ஸ்பரிசத்துக்குப் பின் முற்றிலுமாக நீங்கி விட்டது. ஒருமுறை இவரை கருநாகம் தீண்டியது. சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி நீல நிறத்தில் காணப்பட்டார். பக்தர்கள் அனைவரும் என்ன நடக்குமோ என்று பதறியபோது சாஹிப்பை தீண்டிய கருநாகம் அவர் உடலிலிருந்து விஷத்தை உறிஞ்சிக்கொண்டு அவர் பாதங்களுக்கருகில் விழுந்து உயிர் விட்டது.
அந்த கருநாகத்திற்கு மோட்சம் அளித்தார் மகான். இவரால் திருடுவதையே குலத்தொழிலாக வைத்திருந்த பல திருடர்கள் திருந்தினார்கள். மொத்தத்தில், படே சாஹிப்பின் தரிசனம் பெற்று சகல ஜீவ ராசிகளும் பலனடைந்துள்ளன. மகான் அவர்கள் தன்வந்திரி லோக தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். தன்னிடம் வருபவர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்புவார். இன்னும் சிலருக்குத் தன்னிடம் உள்ள கொட்டாங்குச்சியில் இருந்து நீர் முகந்து தருவார். நோயின் வீரியம் அதிகம் இருப்பவர்களிடம் அங்குள்ள கொன்னை மரத்தை அடையாளம் காட்டி, அதைச் சுற்றி வா என்று ஜாடையால் சொல்வார்.
படே சாஹிப்பிடம் வந்தாலே, நோய்கள் மறைகின்றன என்ற நம்பிக்கை எங்கெங்கும் பரவி, அவர் வாழ்ந்த காலத்தில் தினமும் ஏராளமானோர் இவரைத் தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர். படே சாஹிப் எங்கே, எப்போது பிறந்தார், அவருடைய அவதார தினம் எது போன்ற தகவல்கள் தெரியவில்லை என்றாலும், அவர் ஜீவ சமாதி ஆனது கி.பி.1868ம் வருடம் பிப்ரவரி மாதம் 12ம் தேதி என்று ஒரு குறிப்பு இருக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. ஆயில்ய நட்சத்திரம். எனவே, இவரது ஜீவ சமாதியில் செவ்வாய்க்கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் வழிபாடு விசேஷமாக இருக்கும். மகானின் அருளாசி வேண்டி திரளான பக்தர்கள் குவிவார்கள்.
வழிபாடுகளும் சிறப்பாக இருக்கும். தவிர குருவாரம் என்பதால் வியாழக்கிழமைகளிலும், விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பிஸ்கெட், சாக்லெட் ஆகியவை மிகவும் உகந்த பிரசாதம் என்கிறார் இந்த ஜீவ சமாதியின் பூசாரி. ஜீவ சமாதிக்கு வருகிற பக்தர்கள் வாங்கி வரும் பிஸ்கெட் மற்றும் சாக்லெட்டுகளை அதிஷ்டானத்தில் வைத்து விட்டு பக்தர்களிடம் அவர் தருகிறார். அங்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் அவை விநியோகிக்கப்படுகின்றன. இன்றைக்கும் தன் ஜீவ சமாதி தேடி வரும் பக்தர்களின் பிணியை - அரூப மருத்துவராக இருந்து தீர்த்து வருகிறார் படே சாஹிப்.
0 comments :
Post a Comment