முதன் முறையாக குருதேவரை தட்சிணேசுவரத்தில் சந்தித்த பின்னர் குருதேவரின் அற்புதமான தியாகச் சிந்தை, சிந்தையும் சொல்லும் மாறுபடாத தன்மை இவற்றால் நரேந்திரர் கவர்ந்திழுக்கப்பட்டாலும் அவரைத் தன் வாழ்க்கையின் இலட்சியமாக ஏற்றுக்கொள்ள அவரது உள்ளம் இடம் தரவில்லை. வீடு திரும்பியபின், சில நாட்களுக்கு குருதேவரின் அருமையான பண்பும் நடத்தையும் அவரது மனத்தில் திரும்பத்திரும்ப எழுந்தன. ஆனாலும் அவர் தனது சொந்தக் கடமைகளில் ஈடுபடலானார். அவர் கற்ற மேலைக்கல்வி குருதேவரை அரைப்பைத்தியம் என்று ஒதுக்கவே உதவி செய்தது.
தியானப்பயிற்சி, கல்லூரிப் பாடங்கள் இவை தவிர தினமும் இசை வகுப்பு மற்றும் உடற்பயிற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இவற்றுடன், தன் வயதொத்த நண்பர்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்காக அவர்களை பிரம்ம சமாஜத்தில் ஈடுபடுத்தி, ஆங்காங்கே அழைத்துச் சென்று பிரார்த்தனை, கலந்துரையாடல் போன்ற கூட்டு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். இவ்வாறு பற்பல அலுவல்களில் மூழ்கிக் கிடந்த அவரது மனத்தில், மீண்டும் தட்சிணேசுவரம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அமுங்கி விட்டதில் வியப்பென்ன இருக்க முடியும்?
மேலைக் கல்வி மற்றும் தினசரிக் கடமைகளின் காரணமாக அவர் தட்சிணேசுவரம் செல்லாதிருந்தாலும் அவரது நினைவும் சத்தியநிஷ்டையும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனிமையில் தட்சிணேசுவரம் செல்வதாக குருதேவருக்கு அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றும்படி தூண்டிக் கொண்டேயிருந்தன. எனவே ஒரு மாதத்திற்குப் பின்னர் இரண்டாம் முறை தனியாக தட்சிணேசுவரம் சென்றார். அன்று நடந்த நிகழ்ச்சிகளை அவர் சொற்களிலேயே காண்போம்: தட்சிணேசுவர காளி கோயிலுக்கு நடந்து சென்றேன். கொல்கத்தாவிலிருந்து அது அவ்வளவு தொலைவில் உள்ளது என்று எனக்குத் தெரியாது.
முன்பு வண்டியில் சென்றிருந்தேன். ஆனால், நடக்க நடக்க, பாதை நீண்டு கொண்டே இருந்தது. பலரிடம் விசாரித்துக் கொண்டு தட்சிணேசுவரத்தை அடைந்தேன். நேராக குருதேவரின் அறைக்குச் சென்றேன். அவர் தூங்கும் கட்டிலின் அருகிலுள்ள சிறிய கட்டிலில் தனக்குள் தானாக அமர்ந்திருந்தார். வேறு யாரும் இல்லை. என்னைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை அழைத்து அதே கட்டிலின் ஒரு பக்கத்தில் அமரும்படிக் கூறினார். நான் அமர்ந்தேன். அவர் ஏதோ விந்தையான மனநிலையில் ஆழ்ந்தார். தெளிவின்றி ஏதோ முணுமுணுத்துக் கொண்டு என்னைக் கூர்ந்து பார்த்தபடியே என்னை நோக்கி மெல்லமெல்ல நகர்ந்து வந்தார்.
பைத்தியம் தொடங்கி விட்டது. அன்றுபோல் இன்றும் வினோதமாக ஏதாவது செய்யப்போகிறார் என்று நினைத்தேன். இதற்குள் அவர் என்னை நெருங்கி வந்து தன் வலது பாதத்தை என் தேகத்தின் மீது வைத்தார். அந்தக் கணமே எனக்கு அற்புத அனுபவம் உண்டாயிற்று. கண்கள் திறந்தே இருக்க நான் கண்டது என்ன தெரியுமா? அறையில் இருந்த எல்லாப் பொருட்களும் சுவர்களும் சுழன்று எங்கோ கரைந்தன. பிரபஞ்சமும் அதனுடன் எனது நான்-உணர்வும் எல்லாமே மகாசூன்யத்தில் கரையப் போவதைப் போன்றதோர் உணர்வு என்னுள் ஏற்பட்டது!
சொல்ல முடியாத பேரச்சம் என்னைக் கவ்விக் கொண்டது. நான் என்ற உணர்வின் அழிவுதான் மரணம். அந்த மரணம் இதோ நிற்கிறது, என் கண்முன் நிற்கிறது என்று தோன்றியது! என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘‘ஆ! நீங்கள் என்னை என்ன செய்கிறீர்கள்? எனக்குப் பெற்றோர் இருக்கிறார்கள்’’ என்று நான் அலறினேன். அதைக் கேட்டு அந்த அற்புதப் பைத்தியக்காரர் கலகலவென்று உரக்கச் சிரித்தபடியே என் மார்பைத் தன் கையால் தொட்டு, ‘‘அப்படியானால், இது போதும். ஒரேயடியாக வேண்டாம். உரிய காலத்தில் எல்லாம் நடக்கும்’’ என்று கூறினார். அவர் அவ்வாறு கூறித் தொட்டதுதான் தாமதம்.
அந்தக் கணமே என் அற்புத அனுபவம் மறைந்து விட்டது. நான் இயல்பான நிலையை அடைந்தேன். அறையின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருட்கள் முன்போலவே இருந்ததைக் கண்டேன். இவையனைத்தும் மிகக் குறுகிய காலத்துள் நடந்து முடிந்து விட்டன. இந்த நிகழ்ச்சி என் மனத்துள் பெரிய புரட்சியை உண்டாக்கியது. என்ன நடந்தது என்று பிரமிப்புடன் யோசித்தேன். அந்த விந்தை மனிதரின் ஆற்றலினால் நொடிப்பொழுதில் இந்த அனுபவம் ஏற்பட்டு அதே வேகத்தில் மறைந்தும் விட்டிருந்தது. மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் பற்றிப் படித்திருக்கிறேன்.
இது அதைப்போல் ஏதாவது இருக்கலாமோ என்று யோசித்தேன். ஆனால், அதை ஏற்க என் மனம் மறுத்தது. ஏனெனில் உறுதியற்ற மனங்களின் மீது மட்டுமே மன ஆற்றல்மிக்கவர்கள் ஆதிக்கம் செய்து இத்தகைய நிலைகளை உண்டாக்க முடியும். நான் அப்படிப்பட்டவன் அல்லன். சொல்லப்போனால், இதுவரை என் மனவலிமையிலும், அறிவுக்கூர்மையிலும் மிகுந்த பெருமை கொண்டிருப்பவன். சாதாரண மனிதர்கள்தான் உயர்ந்தோரின் குணநலன்களால் கவரப்பட்டு, அவர்களின் கைப்பொம்மைகளாக இருப்பார்கள். நான் அவரிடம் அப்படி ஆகவேயில்லை.
மாறாக, ஆரம்பத்திலிருந்தே அவரை அரைப்பைத்தியம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். அப்படியிருக்கையில் திடீரென்று எனக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது? ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தேன். எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. கவிஞர் கூறிய சொற்கள் என் நினைவிற்கு வந்தன - ‘‘உன் தத்துவ ஆராய்ச்சிகள் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத பல விஷயங்கள் மண்ணிலும் விண்ணிலும் உள்ளன’’. இதுவும் அதில் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன். இவ்வாறெல்லாம் மண்டையைக் குழப்பி, இறுதியில் இதைப் புரிந்து கொள்ள முடியாது என்ற முடிவிற்கு வந்தேன்.
இனி இந்த அற்புதப் பைத்தியக்காரர் தன் சக்தியால் என் மனத்தைக் கட்டுப்படுத்தி, இத்தகையதொரு நிலையை உருவாக்க விடக்கூடாது என்றும் திடப்படுத்திக் கொண்டேன். ‘உறுதியான மனமும் திட சங்கல்பமும் உடைய என் போன்றவர்களின் மனங்களையும் உடைத்து, தூள்தூளாகச் செய்து, களிமண்ணைப் போன்று பிசைந்து, தான் வேண்டிய உருவம் கொடுக்கவல்ல இவரைப் பைத்தியம் என்று எப்படிக் கூறுவது என்ற எண்ணமும் எழுந்தது. ஆனால், நான் முதன்முறை சென்றபோது என்னைத் தனியாகக் கூட்டிச் சென்று எப்படி அழைத்தார், என்ன பேசினார் என்பதை நினைத்தால் அவரைப் பைத்தியம் என்று அல்லாமல் வேறு என்ன சொல்வது?
மேலேகூறிய என் அனுபவத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாததைப் போன்று, குழந்தையைப்போல் புனிதமும் எளிமையும் பெற்ற அந்த மனிதரைப்பற்றி திடமான எந்த முடிவிற்கும் என்னால் வர முடியவில்லை. ஒரு பொருளைப் பற்றியோ மனிதரைப் பற்றியோ கண்டு, கேட்டு அறிவுபூர்வமாக ஆராய்ந்து பார்த்த பிறகும் என் புத்திக்கு எட்டாத எந்தக் கருத்தையும் நான் ஏற்றுக் கொள்வதோ நிராகரிப்பதோ இல்லை. ஆனால், அன்று எனது அந்த இயல்பிற்கு பலமான அடி விழுந்தது. மனம் சொல்லொணா வேதனையில் ஆழ்ந்தது.
அதன் காரணமாக அந்த விந்தை மனிதரின் இயல்பையும் ஆற்றலையும் எப்படியாவது ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடித்து விடுவது என்ற உறுதியான முடிவிற்கு வந்தேன். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் குருதேவர் முற்றிலும் மாறுபட்டவர்போல் இருந்தார். நீண்ட நாள் பழகியவரைப் போன்று நடந்து கொண்டார். நீண்ட பிரிவிற்குப் பின்னர் நெருங்கிய நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்தால் எவ்வாறு நடந்து கொள்வோமோ, அதுபோன்றே இருந்தது குருதேவரின் செயல்பாடுகள். எனக்கு உணவு அளித்து, என்னிடம் பேசி, வேடிக்கை வினோதங்கள் செய்து எப்படியெல்லாமோ என்மீது அவருக்கிருந்த அன்பினை வெளிப்படுத்தியும் அவருக்குத் திருப்தியே இல்லை.
அவரது இந்த நடவடிக்கைகளைக் கண்டு எனக்கேற்பட்ட பிரமிப்பு கொஞ்சநஞ்சமல்ல. மெல்லமெல்ல அந்திவேளை நெருங்கியதைக் கண்ட நான் அவரிடமிருந்து விடைபெற்றேன். குருதேவர் மிகவும் வேதனையுற்றதுபோல் தோன்றியது. ‘‘மீண்டும் விரைவில் வருவாயா, சொல்’’ என்று மீண்டும் பிடித்துக் கொண்டார். அன்றும் முன்னைப்போலவே வருவதாக வாக்களிக்க வேண்டியதாயிற்று.’’ குருதேவரின் மகத்தான சக்தியைப் பற்றித் தெரிந்தபின், அதை அறிய வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. அந்த ஆர்வம் அவரை விரைவில் குருதேவரிடம் கூட்டி வந்தது.
கல்லூரி நாட்கள் ஆதலால் ஒருவேளை ஒரு வாரம் கழித்து அவர் சென்றிருக்கலாம். ஏதேனும் ஒன்றை அறியும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டால் உணவு, உடை, ஓய்வு எதிலும் அவரது கவனம் செல்லாது; அதை அறியும்வரை அவரது மனம் அமைதி கொள்ளாது. குருதேவரைப்பற்றி அறிய வேண்டும் என்று தோன்றியபோதும், அவரது மனம் அவ்வாறே அமைதி இழந்திருந்திருக்கும். இரண்டாம் முறை ஏற்பட்டது போன்று இம்முறையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியுடனும் எச்சரிக்கையுடனும் அவர் சென்றிருந்திருக்க வேண்டும். ஆனால், நடந்ததென்னவோ சிறிதும் எதிர்பாராதது.
அன்று தட்சிணேசுவரத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ குருதேவர் நரேந்திரரை அருகிலுள்ள யதுமல்லிக்கின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். யதுமல்லிக்கும் அவரது தாயும் குருதேவரிடம் அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர்கள் அங்கு இல்லாதபோதும் குருதேவர் வந்தால் அவர் அமர்வதற்கு கங்கையை நோக்கி யிருக்கும் அறையைத் திறந்துவிட வேண்டுமென்று பணியாளர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்
யதுமல்லிக். அந்தத் தோட்டத்தில் சிறிதுநேரம் நரேந்திரருடன் நடந்தபடியே பல விஷயங்களைப் பேசினார் குருதேவர்.
பின்னர் அறையில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் பரவச நிலையில் ஆழ்ந்தார். சற்று தள்ளியிருந்தபடியே அதனைக் கவனித்துக் கொண்டிருந்தார் நரேந்திரர். அந்த வேளையில் முந்தைய நாளைப்போல் பரவச நிலையிலேயே வந்து திடீரென்று நரேந்திரரைத் தொட்டார். நரேந்திரர் எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் அந்த சக்திவாய்ந்த ஸ்பரிசத்தால் தன்வசம் இழந்தார். முந்தைய அனுபவங்களைப் போலன்றி இம்முறை அவர் புறவுலக உணர்வை அடியோடு இழந்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவருக்கு நினைவு வந்தபொழுது குருதேவர் புன்முறுவலுடன் அவரது மார்பின் மீது கையால் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டார்.
புறவுலக உணர்வை இழந்தபின் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப்பற்றி நரேந்திரர் எதுவும் கூறவில்லை. அது ரகசியம் என்பதால் இருக்கலாம். ஆனால், ஒருநாள் குருதேவர் எங்களிடம் இதுபற்றிக் கூறியதிலிருந்து இந்த அனுபவத்தைப் பற்றி நரேந்திரருக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரியவந்தது. குருதேவர் கூறினார்: ‘‘நரேந்திரன் அன்று புறவுணர்வை இழந்த வேளையில் நான் அவனிடம், அவன் யார், எங்கிருந்து வந்திருக்கிறான். எதற்காக வந்துள்ளான் (பிறந்துள்ளான்), இங்கே (பூமியில்) எவ்வளவு காலம் இருப்பான் என்பன போன்ற பல கேள்விகளைக் கேட்டேன்.
அவனும் தன்னுள் மூழ்கி, பொருத்தமான பதில்களைச் சொன்னான். அந்த பதில்கள் நான் அவனைப்பற்றிக் கண்டவற்றையும் எண்ணியவற்றையும் ஊர்ஜிதப்படுத்தின. அவை எல்லாவற்றையும் வெளியில் சொல்லக் கூடாது. அவற்றிலிருந்து ஒன்று தெரிந்து கொண்டேன். தான் யார் என்பதை அவன் அறிந்து கொண்டால் அதன்பின் அவன் இவ்வுலகில் இருக்க மாட்டான்: திட சங்கல்பத்துடன் அன்றே யோகத்தில் தன் உடலை உகுத்துவிடுவான். நரேந்திரன் தியான சித்தன், மகாபுருஷன்.
0 comments :
Post a Comment