‘‘உலகின் மொத்த மரங்களையும் அரைத்துக் காகிதங்களாக்கி, மொத்தக் கடல்நீரையும் மையாக்கி எழுதுகோலில் நிரப்பி எழுதினாலும் குருவின் மகிமையை முழுமையாக விவரித்துவிட முடியாது’’ என்று கபீர்தாசர் கூறுவார். சிறிய வெளிச்சம் முதல் மாபெரும் ஞானப் பிரகாசம் வரையிலான இருளடைந்த மாயையை அறுத்தெறியும் பெருஞ்ஜோதியே குரு. இந்தியாவில் ஜனித்த ஒவ்வொரு ஜீவனுக்குப் பின்னாலும் ஒரு குரு பரம்பரை உண்டு. பெற்றோர் இல்லாத பிள்ளை இருக்கலாம், ஆனால், ஏதோ ஒருவிதத்தில் குரு இல்லாத பிரஜை இங்கில்லை என்று சொல்லிவிடலாம்.
ஊசிக்குள் நூல் கோர்ப்பது முதல் பிரம்ம வித்யைவரை போதிப்பவரே குரு. தான் வென்ற தேசத்தையே வீரசிவாஜி தனது குருவான சமர்த்த ராமதாஸரின் திருவடியில் சமர்ப்பித்தான். இறுதியில் தன்னையே குருவின் திருவடியில் ஒரு உண்மையான சீடன் சமர்ப்பித்து விடுகிறான். அதற்கும் குருவின் அருளே காரணம்! இப்பேற்பட்ட மகத்தான குருவாக இந்த நூற்றாண்டில் அவதரித்தவரே, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். குரு எனும் பெருங் கிரீடத்தில் தனித்த குரு ரத்னமாக ஜொலித்தவர் அவர்.
பக்தியும் பேரன்பும் பொங்க ‘பெரியவா, காஞ்சி மகாசுவாமிகள், நடமாடும் தெய்வம், காஞ்சி முனிவர் என்றழைத்து நாம் மகிழ்ந்தது மட்டுமல்ல, திபெத்தியர்கூட living Buddha என்று அவரைப் போற்றியிருக்கிறார்கள். அவரே கோடிக்கணக் கானவர்களுக்கு குல குருவாகவும், ஏன் குல தெய்வமாகவே திகழ்ந்தார். இப்பேற்பட்ட மகாபெரியவரின் அனுக்கிரகம் பெற்று அவரைக் குறித்தே எல்லா இடங்களிலும் உபந்யாசம் செய்து வருகிறார் திரு. கணேச சர்மா அவர்கள். குருவருள் பொலிந்த முகம். மெல்லிய நீரோடை போன்ற பேச்சு.
‘இப்பேற்பட்ட பெரியவா ஒருமுறை....’ என்று தொடங்கி சரசரவென நினைவடுக்கிலிருந்து சர்வ சாதாரணமாக சம்பவங்களைப் பொழியும் வேகம். தேனை உண்டு மயங்கிய வண்டுபோல கேட்போரின் உள்ளத்தில் கதாம்ருதம் தளும்ப வைப்பவர். மகாபெரியவரின் பேரருளை இவரின் சொற்களால் கேட்போரின் இதயத்தில் நுழைந்து மாற்றத்தை ஏற்படுத்தும் அதிசயத்தை ‘பெரியவா’ளின் பெருங்கருணையால் நிகழ்த்துகிறார். காஞ்சி மகாபெரியவரின் அருட்சுழல் எப்படி உங்களை ஈர்த்தது? அது அவரின் அருளால்தானே நிகழ முடியும்! அதற்கு முக்கிய காரணம், பிரதோஷம் மாமா என்கிற, பெரியவாளின் பெரும்பக்தர்தான்.
அவர் சகலமும் பெரியவா என்றிருப்பார். நின்றாலும் நடந்தாலும் உண்டாலும் உறங்கினாலும் பெரியவாளின் சிந்தனைதான். புராண காலத்தில்தான் அப்படிப்பட்ட பக்தர்களை அறிந்திருப்போம். ஆனால், நம் காலத்திலேயே குருபக்திக்கு உதாரணமாக திகழ்ந்தார். பிரதோஷத்தன்று சாட்சாத் பரமசிவனே பெரியவாதான் என்று தான் அவரை தரிசிப்பார். அவருக்கு எல்லா தெய்வமுமே பெரியவாதான். ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. உலகத்தின் பார்வையில் புத்தி சுவாதீனமில்லாம இருப்பார்கள். ஆனால், ஞானக் குழந்தைகள்.
ஒருமுறை பெரியவாவிடம் இதைப் பற்றி மாமா பிரார்த்தித்தபோது, ‘‘அவா இருக்கா உன்னை என்ன பண்றா?’’ என்று கேட்டார் பெரியவா. எப்போதுமே பெரியவா பிராரப்தத்தில் தலையிடமாட்டார். அவர் நினைத்தால் பிராரப்தத்தையே கூட மாற்றலாம். ஆனாலும், கூடுமான மட்டிலும் சிரமத்தை தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை கொடுப்பார். கஷ்டத்தில் என்ன செய்ய வேண்டுமென்கிற விவேகத்தை அருளுவார். ஆனால், பிரதோஷம் மாமாவின் இரண்டு குழந்தைகளும் ஞான மயமாக இருந்தார்கள். ஒருமுறை க்ரீஸ் தேசத்து ராணி பெரியவாளை தரிசிக்க வந்தபோது, ‘‘அங்கே ரெண்டு ஞான குழந்தைகள் இருக்கா.
பார்த்துட்டுப் போங்கோ’’ என்று சொல்லியிருக்கிறார். ஆஞ்சநேயருக்கு ராமபக்திபோல அவருக்கு பெரியவாளிடத்தில் பக்தி உண்டு. சைகையில் கூட பேசாத காஷ்ட மௌன காலத்தில் கை உயர்த்தி அவருக்கு ஆசீர்வாதம் செய்திருக்கிறார். பெரியவா என்றாலே எல்லோருக்குள்ளும் தனித்தனியாக ஒரு அனுபவம் இருக்குமல்லவா? ஆமாம். பெரியவாளை நேருக்கு நேர் தரிசித்து அவரின் அருளையும், கூர்மையான அறிவையும், அகண்ட ஞானத்தையும் புரிந்து கொண்டவர்கள் மிகவும் அதிகம். எல்லோருக்கும் மகாபெரியவரிடம் ஒரு அனுபவம் இருக்கும்.
அதை அவர்கள் மறக்க மாட்டார்கள். எனெனில், ரத்தமும் சதையுமாக தெய்வம் இங்கு நடமாடி எல்லோரிடமும் பேசியது. அவர் இருக்கும் போதே இது தெய்வமென்று எல்லோரும் அறிந்திருந்தார்கள். ஏனெனில் நம் தேசத்தில் சில அவதார புருஷாள் சித்தியான பிறகுதான் அவரின் அருமையும் பெருமையும் புரியும். ஆனா, பெரியவாளோட அனுக்கிரகம் நேரடியாவே எல்லோரையும் அடைந்தது. அது பெரிய பாக்கியமாகவும் அமைந்தது. பெரியவா என்றாலே ஆச்சரியமூட்டும் சம்பவங்கள், மிராக்கிள்தானே முதலில் நினைவுக்கு வரும்?
எல்லா ஞானிகளையும் சுற்றிலும் இப்படியெல்லாம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால், அதை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில் உலகம், மிராக்கிள்ஸ் எனில் முதலில் மயங்குகிறது. ஆனால், அவர்கள் அதற்காக வரவில்லை. அவர்களின் விஷயமே ஒவ்வொரு ஜீவனும் தன்னை ஞானமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதற்கான பாதைகளை காட்டுவது தான். பெரியவா எப்போதுமே வேதங்களும், வேதாந்தங்களும், சாஸ்திரங்களும் என்ன சொன்னது என்பதைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டி ருந்தார்.
பெரிய கோடீஸ்வரரிடம் சென்று எனக்கு ‘டீக்கு காசு கொடு’ என்று கேட்பது போன்றதுதான் மிராக்கிள்ஸ். மேலும், அதிசயங்கள் மட்டும்தான் பெரியவா நிகழ்த்துவார் என்று நாம் அவரை கீழே இறக்கக் கூடாது. நாம் ஒரு காரியத்தை ஒரு போன் காலிலேயே முடித்துக் கொள்கிறோம். நமக்கே இது முடியுமானால் அவதார புருஷர்கள் பூமிக்கு வராமலேயே பல காரியங்களை செய்து கொள்ளக் கூடுமல்லவா? ஆனால், அப்படி இல்லாமல் கீழே இறங்கி வருகிறார்கள். பெரியவா நூறு வருஷங்கள் எவ்வளவு காரியங்களை செய்தார்...
எத்தனை சிரமங்களை மேற்கொண்டார்... ‘பெரியவா... பெரியவா...’ என்று சொல்லி கன்னத்தில் போட்டுக் கொண்டால் மட்டும் பிரயோஜனமில்லை. ராம பக்தன் எனில் அவன் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் நினைக்காமல் இருக்க வேண்டுமென்கிற பக்தி, காரியத்தில் சித்திக்க வேண்டும். அதுவே ராம பக்திக்கு சாட்சி. குழந்தைக்கு சாக்லேட், பிஸ்கெட் கொடுப்பதுபோல்தான் பல சமயங்களில் மிராக்கிள்ஸ். ஆனாலும், அதை சாப்பிட வாங்குவதற்காக அருகே செல்லும்போது அவர் நம்மை விழுங்கிவிடுவார். நாமும் பெரியவாளாக ஆவோம். புரிகிறதா?
அவரின் கவலையே வேதமும், வேத நெறியும், அதன் நோக்கமும் எல்லோருக்கும் புரியச் செய்வதுதான் அல்லவா? அந்த மார்க்கத்தை பிரகாசமடையச் செய்தாரா? மிக நிச்சயமாக. இந்த விஷயம் சமூகத்தில் மிகச் சரியான முறையில் பிரகாசமானால் எல்லாமுமே சரியாகும். சமச்சீராக இயங்கும். எனவே, வேதங்கள் ஓதுபவர்களும், மற்றவர்களுக்கு கர்மாக்களை செய்து வைக்க வேண்டியவர்களுமான பிராமணர்கள் இந்தப் பாதையிலிருந்து மாறிவிட்டார்களே என்று அவர்களை நோக்கியே நிறைய விஷயங் களை போதித்தார்.
இந்த அந்தண சமூகம் தன்னுடைய வேலையான வேதம் ஓதுதலை விட்டு விட்டு வேறென்னன்னவோ செய்து கொண்டிருக்கிறதே என்று கவலை கொண்டார். நம்முடைய சனாதன தர்மமான இந்து மதத்தின் வேராக வேதங்கள் இருக்கின்றன. அந்த வேத நெறி வளரவும், தழைக்கவும் என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தார். பெரியவா மேற்கொண்ட யாத்திரைகள்? பெரியவா தன்னுடைய ஜீவிய காலத்தில் அறுபது வருடங்களை யாத்திரையிலேயே செலவிட்டார். தொண்ணூறு வயது வரை யாத்திரை செய்து கொண்டிருந்தார்.
1920 முதல் 1930 வரை மத்தியப் பிரதேசம் மற்றும் காசி வரையிலும் சென்று வந்தார். பாரத தேசம் முழுவதும் தம் பாதம் பதித்தார். அந்தக் காலத்திலேயே இருநூறு வண்டிகள், சிப்பந்திகள், மூன்று நான்கு யானைகள் என்று பெரியவாளோடு சென்று திரும்புவார்கள். நதிக்கரையோரம், தண்ணீர் டாங்கிற்கு அடியில், மாட்டுக் கொட்டகை என்று இடம் பாராமல் மிக எளிமையாக தங்கிக் கொள்வார். உங்களிடம் பெரியவா நேரடியாக ஏதேனும் உபதேசம் செய்திருக்கிறாரா? வேறு ஏதாவது விஷயங்களை பேசியதுண்டா?
தனித்து நேருக்கு நேராக பேசியதில்லை. ஆனால், ஐந்தாறு பேர் பேசும்போது அவர்களின் மத்தியில் இருந்திருக்கிறேன். நிறைய பக்தர்கள் எப்போதுமே பெரியவா நம்மோடு மட்டும்தான் இருக்க வேண்டுமென்கிற பொஸஸிவ் குணத்தோடு இருப்பார்கள். அது ஒருவிதமான பக்தி. பெரியவா ஒருமுறை மேனாவுக்கு சற்று வெளியில ஏகாந்தமா உட்கார்ந்திருந்தார்கள். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அந்த முகத்தை அன்று பார்த்தபோது அப்படியே திகைத்து நின்று விட்டேன். அவருக்கு நேராக ஒரு கேட் இருக்கும். அங்கிருந்து பார்த்தால் நான் மட்டுமே தெரிவேன்.
வேறு எவரும், எதுவும் தெரியாத இடம் அது. நான் அவரை பார்த்தபடியே நின்றிருந்தேன். என் மனதிற்குள் பக்கம் பக்கமாக மானசீகமா நூற்றுக்கணக்கான பிரார்த்தனைகள் ஓடிக் கொண்டேயிருந்தன. மானசீகமாக என்னவெல்லாமோ கேட்டேன். என்னுடைய பட்டியல் ஒருமணி நேரத்துக்கும் மேலேயும் போய்க்கொண்டிருந்தது. அன்றைக்கு நான் கேட்டதெல்லாம் இன்றைய தினம் வரையிலும் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. பெரியவா அந்த ஒரு மணிநேரத்தில் நிறைய முறை ஆசீர்வாதம் செய்தார். ஒருவேளை அந்த ஒன்றில் அவரைப் பற்றி நான் உபந்யாசம் செய்ய வேண்டும் என்பதும் இருக்கக்கூடும்.
அதற்குப் பிறகு நான் வேறெதுவும் கேட்கவில்லை. கேட்கவும் தோன்றவில்லை. ஞானியின் சந்நதி அண்மை கிடைக்கும்போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்ய வேண்டாம். ஞானிகளின் சந்நதியில் நம்மை நாம் ணீஸ்ணீவீறீணீதீறீமீ ஆக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, வேறெந்த கவனத்திற்கும் உட்படாமல் அவர்கள் நம்மை ஏதேனும் செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டும். எழுந்து நடக்கும்போது சூட்சுமமாக ஏதோவொன்று வேலை செய்யும். அதுவும், அவர்களுக்கு அருகே நாம் தூங்கும்போதான சந்தர்ப்பங்கள் வரும்போது என்ன நடக்குமென்றே சொல்ல முடியாது.
காஞ்சி மடத்திற்கு நாங்களெல்லாம் செல்லும் காலத்தில் இரவில் கொசுத் தொல்லை தாங்காது. பெரியவா எப்படி தினமும் இங்கிருக்கிறார் என்றே தோன்றும். எழுந்து அந்தப் பக்கமாக போய் மின்விசிறியை போட்டுத் தூங்கலாம் என்று தோணும். ஆனால், நகரவே கூடாது. ஒருமுறை பெரியவா அப்படி படுத்துக் கொண்டிருக்கும்போது நாங்கள் சிலர் சற்று அருகேயே தூங்கிக் கொண்டிருந்தோம். பெரியவாளும் எழுந்துவிட்டார்கள். உடனே நாங்களும் எழுந்தோம். இருட்டில் யார் யார் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பெரியவா சட்டென்று அருகே வந்து முகத்தில் டார்ச் அடித்தார். என்னை நோக்கி கையமர்த்தி உட்கார் என்று காண்பித்து விட்டு வெளியே சென்று வந்தார்கள். அவர் உள்ளே நுழைந்தபோது உடனிருந்தவர் ‘பெரியவா வரா எழுந்திரு... எழுந்திரு... ’ என்று பரபரத்தபோது, பெரியவா, ‘ம்ஹூம்... அவனை நான்தான் உட்காரச் சொன்னேன். உட்காரட்டும்,’ என்று சொல்லி விட்டுச் சென்றார். மகாபெரியவரை தரிசிக்கச் செல்லும் போதெல்லாம் அவரை கவனித்துக் கொண்டே இருப்பேன். அந்த நுணுக்கமான பேச்சு, சைகை பாஷை, சிரிப்பு, சட்டென்று புரிந்து கொள்ள முடியாத சில சங்கேதங்கள் அனைத்தையும் கவனிப்பேன்.
யாரோ ஒருவர் ஊரிலிருந்து வந்திருப்பார். அவரிடம் இவரைத் தெரியுமா, அவரைத் தெரியுமா என்று கேட்டுக்கேட்டு அவர் எதற்காக வந்திருக்கிறாரோ அந்தப் பிரச்னையின் மையத்தை சுட்டிக் காண்பிப் பார். வீட்டில் என்னென்னவோ ஸ்லோகங்களெல்லாம் சொல்ல வேண்டுமென்று மனதுக்குள் தீர்மானித்து பேருந்தில் கூட சொல்லிக் கொண்டே போவேன். ஆனால், அங்கு சென்றவுடன் ஒரு ஸ்லோகம் கூட சொல்லத் தோன்றாது. அப்படியே அவரையே பார்த்துக் கொண்டே இருப்பேன். காஞ்சி பெரியவர் காலத்தில் நாத்திகம் இன்னும் தீவிரமாக பிரசாரம் செய்யப்பட்டதில்லையா?
ஆனால், பெரியவர் பதிலுக்கு எதுவுமே செய்யவில்லை. ‘நீங்கள் உங்கள் கர்மானுஷ்டானங்களை ஒழுங்காகச் செய்யுங்கள், போதும்!’ என்பார். அவருடைய மனக்குறையெல்லாம் இந்த அந்தண சமூகம் எப்படியாவது மீண்டும் வேதங்களைக்கப் பற்றிக் கொள்ள வேண்டுமென்றும், அவர்களின் தர்மப்படி அதற்குரிய அனுஷ்டானங்களை செய்ய வேண்டுமே என்பதாகத்தான் இருந்தது. சனாதன தர்மமான இந்து மதத்தின் இலக்குகளை அடிப்படையிலிருந்து போதித்து வந்தார். கோயிலுக்குச் செல்லலாமா என்று கேட்பது முதல் ஆத்ம விசாரம்வரை இவரிடத்தில் வந்து விளக்கம் பெற்றுச் செல்வார்கள்.
இந்து மதத்தின் சகல விஷயங்களையும் தெய்வத்தின் குரல் புத்தகங்களில் கொட்டியிருப்பதை காணலாம். எந்தத் தலைவரைப் பற்றியும் தவறான அபிப்ராயத்தைச் சொல்ல மாட்டார். ‘‘அவர்களுக்கு கிடைத்த சீடர்கள் மாதிரி எனக்கு கிடைக்கவில்லையே. அவர்களெல்லாம் அவர்கள் தலைவர் சொல்படி கேட்கிறார்கள். ஆனால், என் சீடர்கள் அப்படி கேட்பதுமில்லை. நான் சொல்வதை செய்வதுமில்லை,’’ என்று வேடிக்கையாகவும் சற்றே ரகசியமான ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார். இது தவிர தன்னை தரிசிப்போருக்கும் ஏதேனும் ஒருவிதத்தில் தர்ம சூட்சுமங்களை பதித்து விடுவார்.
உங்களுக்கு காஞ்சி மகாபெரியவரைப் பற்றி உபந்யாசம் செய்ய வேண்டுமென்கிற உந்துதல் எப்படி ஏற்பட்டது? பிரதோஷம் மாமா என்று சொன்னேனே அவர்தான் இதற்கும் காரணம். மாதாமாதம் வரும் சிவராத்திரி அன்று, வருடாவருடம் வரும் சிவராத்திரி போன்று எல்லா பூஜைகளையும் நிகழ்த்தி கண்விழித்திருப்பார். நான் அப்போது டாபே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். நாங்கள் பத்து பேர் சத்சங்கமாக பிரதோஷம் மாமா வீட்டிற்குச் சென்று சிவராத்திரி பூஜைகளில் கலந்து கொள்வோம். அவர், ‘‘எதுக்கெல்லாமோ உண்ணாவிரதம் இருக்கோம். இன்னிக்கு விரதம் இருக்கக் கூடாதா?’’ என்பார்.
நாங்கள் அனைவரும் விரதமிருப்போம். பிரதோஷம் மாமா ரவி என்கிற பெரியவா பக்தரை பெரியவரைப் பற்றி பேசச் சொல்லுவார். அது போலவே என்னையும் பேசச் சொல்லுவார். ஒருநாள், ‘‘அவனுக்கு ஒரு ஆசனம் கொடு. பெரியவா பத்தி பேசறவனாச்சே!’’ என்று என்னை பேசச் சொல்லி கேட்பார். மீண்டும் மீண்டும் பெரியவா பற்றி நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டேயிருப்போம். அவர்தான் முதன்முதலாக என்னை பேச வைத்தவர். மகாபெரியவா அவரை அறுபத்து நான்காவது நாயன்மார் என்றே கூறுவார். இப்படித்தான் முதன் முதலாக பேசத் தொடங் கினீர்களா?
ஆமாம். உபந்யாசமே தொடர்ந்து செய்யப் போவதற்கு அச்சாரமாக வேறொரு விஷயமும் இருந்தது. நமக்கு யாராவது பெரிய உபகாரம் செய்தால் நாம் என்ன சொல்வோம்? ‘கோயில் கட்டி கும்பிடணும்’ என்போம் அல்லவா? அதுபோலத்தான் மகாபெரியவாளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமென்று பெரிய ஆசை நிறைய பேருக்கு இருந்தது. ஆனால், எப்படிக் கட்டுவது, எவ்வளவு பணம் செலவாகும் என்று யோசிக்கும்போது குருசரித்திரம் என்கிற ஒரு புத்தகத்தை பிரதோஷம் மாமா கொடுத்தார். வெங்காஜிராவ் என்கிற பக்தர் அதை எழுதியிருந்தார்.
அவர் ஆரம்பத்தில் தத்தாத்ரேயரைப் பற்றி உபந்யாசம் செய்து செய்தே கோயில் கட்டினார் என்று வரும். அந்தப் புத்தகத்தை சாந்தானந்த சுவாமிகள் கூட மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். சட்டென்று எங்களுக்குள் மின்னலாக ஒரு யோசனை தோன்றியது. பெரியவா பற்றி நம்மில் யாராவது உபந்யாசமாகச் செய்து, அப்போது கிடைக்கும் காணிக்கையைக் கொண்டு மணிமண்டபம் கட்டலாமே என்று தோன்றியது. ஆத்மநாதன் என்பவர் என்னிடம் ‘பேச முடியுமா?’ என்று கேட்டார். பிரதோஷம் மாமா வீட்டில் பேசியிருக்கிறேன். மிகவும் குறிப்பிட்ட பக்தர்கள் மத்தியில் பேசியிருக்கிறேனே தவிர பொது ஜனங்களின் மத்தியில் பேசியதில்லை.
மேலும், பெரியவாளைப் பற்றி மட்டுமே உபந்யாசம் என்றால் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் தவிர அடிப்படையாக நான் கொஞ்சம் ரிசர்வ் டைப். பத்து கேள்விகள் கேட்டால் பொதுவாக இரண்டு மூன்று வரிகளில் விடை கொடுப்பேன். நான் எப்படி பொதுமக்கள் மத்தியில் பேசப்போகிறேன் என்கிற சந்தேகம் அப்போது என்னை சுற்றியிருந்தவர்களிடையே இருந்தது. ‘நீ பேசப் போகிறாயா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் எனக்குள் பேசமுடியும் என்கிற நம்பிக்கையை பெரியவா கொடுத்திருந்தார். உடனே உபந்யாசத்தை தொடங்கிவிட்டீர்களா? என்ன பேசுவது என்கிற திட்டம் வைத்திருந்தீர்களா?
சட்டென்று ஒரு கணத்தில் திட்டம் உருவானது என்றுதான் சொல்லுவேன். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாலட்சுமி மாத்ருபூதேஸ்வரர் டிரஸ்ட் உருவாகியது. இந்த டிரஸ்ட்டில் நிறையபேர் சங்கமித்தார்கள். அப்போது மணி ஐயர் என்பவரை பார்க்கப் போனபோது ராமரத்னம் என்பவருடன் காரில் சென்று கொண்டிருந்தேன். பெரியவாவைப் பற்றி எப்படி பேசப் போகிறேனோ என்ற சிந்தனையில் உழன்றேன். ராமா யணத்தில் எப்படி காண்டங்கள் இருக்கிறதோ அப்படியே பெரியவா சரித்திரத்தையும் அவதார காண்டம், விஜய யாத்திரை காண்டம், அற்புத காண்டம், உபதேச காண்டம், அனுக்கிரக காண்டம், சர்வக்ஞ காண்டம், ஸ்மரண காண்டம் என்று ஏழாகப் பிரித்தேன்.
இன்று வரை அதில் எந்த மாற்றமும் செய்யாமல் சொல்லி வருகிறேன். பெரியவாளைப் பற்றி யார் யார் என்னென்ன தகவல்களை சொல்கிறார்களோ அதை அந்தந்த காண்டத்தில் சேர்த்துக் கொண்டே வருவேன். ஒருநாள் ரா. கணபதி அண்ணா அவர்கள் ‘நன்றாக இருக்கிறதே இது!’ என்று பாராட்டினார்கள். முதன்முதலாக கும்பகோணம் சங்கரமடத்தில் குருமூர்த்தி எனும் அன்பர் பொதுமக்கள் மத்தியில் பேச ஏற்பாடு செய்தார். அப்போது புதுப் பெரியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தஞ்சாவூரில் இருந்தார்.
‘‘நானே வந்து ஆரம்பிச்சு வைக்கறேனே’’ என்று அருளினார். அதுதான் எனக்கு பெரிய தொடக்க மாக இருந்தது. அன்று காலை வரை அவர் வந்து ஆரம்பித்து வைப்பார் என்றே எனக்குத் தெரியாது. இதற்கு நடுவே வேலைக்கும் சென்று கொண்டிருந்தீர்களா? ஆமாம். மாலை நேரத்தில் உபந்யாசம். காலையில் வேலை என்று மாறிமாறி சென்று கொண்டிருந்தேன். பல சமயங்களில் இதற்காகவே எனக்கு அலுவலகத்தில் சலுகைகள் கொடுத்து ஊக்கமளித்தனர். 2005ம் வருடம் வேலையையும் விட்டுவிட்டேன்.
உபந்யாசம் தவிர பெரியவரைப் பற்றி வேறென்ன செய்து வருகிறீர்கள்? ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை கிருஷ்ணகான சபாவில் மாலை ஆறரை மணிக்கு தெய்வத்தின் குரல் என்று மகாபெரியவரின் உபதேசங்கள் குறித்து பேசுகிறேன். ஒவ்வொரு மாதமும் அனுஷ நட்சத்திரத்தன்று மாலை ஏழு மணியளவில் எங்கள் வீட்டிலிருந்து மகா பெரியவரின் திருவுருவச் சிலையோடு கூடிய பல்லக்கை சுமந்து கொண்டு மயிலாப்பூர் மாட வீதி முழுவதும் சுற்றி வருவோம். அவரைக் குறித்த பாடல்களும் அதில் இடம் பெறும். இதுதவிர ‘சங்கீத சங்கரர்’ ‘மகாபெரியவாளும் மணிமண்டமும்’, நாமசங்கீர்த்தன பஜனை சம்பிரதாயத்தையொட்டி‘ ஸ்ரீகுருநாம சங்கீர்த்தனம்’ எனும் பஜனை பாடல்கள் அடங்கிய நூல்களையும் இயற்றியுள்ளேன்.
0 comments :
Post a Comment