அமாவாசை தினங்களில் தான் விண்ணுலகில் உலவும் மறைந்த முன்னோர் தங்கள் சந்ததியினரின் வேண்டுதல்களை, வழிபாடுகளை ஏற்க இப்பூவுலகிற்கு வருகிறார்கள் என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர்தங்கள் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை தினங்களில் விரதம் கடைபிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை தினங்களுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடிஅமாவாசை மற்றும் தைஅமாவாசை ஆகும்.
மூதாதையர்களை பல ஆண்டுகளாக நினைக்கத் தவறியவர்கள் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்கு சிறந்தது என்பதால், முன்னோர்(பித்ருக்கள்) வழிபாட்டுக்கு அமாவாசையை தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் புரோகிதர் மூலம் தர்ப்பணம் செய்வது சிறப்பு. தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் (கவனம்) செய்வது என்று அர்த்தம்.
அவ்வாறு இயலாத பட்சத்தில், மந்திரம் எதுவும் சொல்லாமல் பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி, காய்கறி, பழம், தட்சணை, வஸ்திரம் முதலானவற்றை வேறுயாருக்கேனும் தானம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். எள்ளும் நீரும் கலந்து நாம் அளிக்கும் தர்ப்பணத்தில் தர்ப்பைப் புல்லுக்கு முக்கிய பங்கு உண்டு. எங்கும் வளரும் தர்ப்பைப்புல் மிகவும் அதிசயமான மின் சக்தியைக் கொண்டது. மந்திரசக்தியை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை இதற்கு மிகமிக அதிகம். தர்ப்பைப்புல் தீய எண்ணங்களையும், கர்ம வினைகளையும் நம்மிடம் ஒட்டாமல் இருக்க உதவுகிறது.
தேவர்களும், பித்ருக்களும் நம் கண்களுக்கு தெரியாத ஒளி ரூபத்தில் வந்து தர்ப்பையில் அமர்கின்றனர். தர்ப்பணத்திற்கு தர்ப்பைப்புல்லை நம் கையால் தொடும் பொழுது முழுமனதோடு நம்பித்ருக்களை நினைவுபடுத்தி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். எனவே, தர்ப்பைப்புல்லை கையாளும் போது பயபக்தியுடன் கையாள வேண்டும். அமாவாசை அன்று காலையில் எழுந்து ஆற்றில், நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் மறைந்த முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவஉணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.
முன்னோர்கள் தெய்வமாக நம்முடன் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் முன்னோர் வழிபாடு முன்னேற்றம் தரும் என பெரியவர்களால் கூறப்படுகிறது. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே, முதலில் மறைந்த முன்னோர் வழிபாட்டை செய்ய வேண்டும். முன்னோர்களை வணங்கினால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நிச்சயம். பேரூர் நொய்யல் ஆற்றங்கரை பிராமணர் புரோகிதர்கள் சங்க தலைவர் சீதாராமன் கூறுகையில், பேரூரில் ஆடி அமாவாசையில் பிதிர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகச் சிறப்பாகும். இதையொட்டி தர்ப்பணம் செய்யவரும் பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன, என்றார்.
0 comments :
Post a Comment