ஆவணி மாத பவுர்ணமிக்கு முதலாக வரும் வெள்ளிக்கிழமை பெண்கள் வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பர். திருமணமான சுமங்கலி பெண்களும் திருமணத்தை எதிர்நோக்கும் கன்னிப் பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலில் அமுதத்தைப் பெறவேண்டி தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது பலவித பொருட்களுடன் மகாலட்சுமி தேவியும் தோன்றி வரம் அளித்தாள். அவ்வாறு அந்த தினம் தான், பெண்கள் கடைப்பிடிக்கும் வரலட்சுமி நோன்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என புராணங்கள் கூறுகின்றன.
சோழர் காலத்தில் வாழ்ந்த சாருமதி என்ற பத்தினி பெண்ணின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, மாங்கல்ய பலம் அருளும் வரலட்சுமி விரதம் குறித்தும், அவற்றை விடாது கடைப்பிடித்தால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்தும் விளக்கிக் கூறினாள். பின்னர் கனவு கலைந்து எழுந்த சாருமதி, ஒவ்வொரு ஆண்டும் மகாலட்சுமி அன்னையின் ஆணைப்படி வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்தாள். அத்துடன், அதன் மகிமைகள் பற்றி எல்லா பெண்களிடமும் எடுத்துக் கூறியதுடன், அவர்களையும் வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்க செய்தாள். பின்னர் அந்த விரதம் வழித்தோன்றலாக அனைத்து தரப்பு மக்களிடையேயும் பரவி, இன்றுவரை அனைத்து பெண்களும் கடைப்பிடிக்கும் விரதமாக மாறியுள்ளது என்று வரலாறுகள் கூறுகின்றன.
விரதம் கடைப்பிடிக்கும் முறை:
வரலட்சுமி விரதத்துக்கு முதல் நாள் வீட்டை கழுவி, மஞ்சள் கலந்த நீரை தெளித்து தூய்மைப்படுத்தி கோலமிட வேண்டும். பின்னர், பூஜையறையில் சுத்தம் செய்த மணப்பலகையில் மாக்கோலம் போட்டு வைக்க வேண்டும். விரத தினத்தன்று காலை மாக்கோலம் போட்ட மணப்பலகையில், நெல் பரப்பப்பட்ட தட்டை வைத்து, அதன்மேல் நீர் நிரப்பிய கும்ப கலசத்தை வைக்க வேண்டும். அந்த கலசத்தில் அம்மனின் முகத்தை வைத்து, பட்டுப் பாவாடை கட்டி, நகைகள் அணிவித்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். கும்ப கலசத்தின் பின்னே மகாலட்சுமி உருவப்படத்தை அலங்கரித்து வைத்து, கலசத்தில் மஞ்சள் கயிறுகளை வைத்து சுமங்கலி பெண்கள் பூஜை செய்ய வேண்டும்.
பின்னர் ‘எங்கள் வீட்டில் எழுந்தருளி இருக்கும் வரலட்சுமி தாயே, எங்கள் அனைவருக்கும் எப்போதும் மாங்கல்ய பலமும் தேக ஆரோக்கியமும் அளித்து, திருமண வாழ்வு சிறப்புற்றிருக்க வரம் அருள வேண்டும். அதேபோல், எங்கள் வீட்டிலும் எனது சுற்றத்தார் வீட்டிலும் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டியபடி, நெய்விளக்கு தீபத்தை ஏற்றிவைக்க வேண்டும். இந்த வரலட்சுமி விரதத்துக்கு தங்கள் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுத்து, அவர்களையும் பூஜையில் கலந்துகொள்ள செய்ய வேண்டும். பின்னர் அனைத்து பெண்களும் வரலட்சுமி தாயின் சுலோகங்களைப் பாடி, பாசுரங்களைப் படித்து, மகாலட்சுமி அன்னைக்கு தூப, தீப ஆராதனைகளை செய்து, வணங்க வேண்டும்.
வரலட்சுமி தாய்க்கு நோன்பு அடை படைக்க வேண்டும். பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்கள், கன்னிப் பெண்களுக்கு மஞ்சள் கயிறு கட்டிவிட வேண்டும். அதேபோல், ஒரு சுமங்கலி பெண்ணுக்கு மற்றொரு சுமங்கலிப் பெண் மஞ்சள் கயிற்றை கட்டி, அவர்களுக்கு பூ, மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும்.
இவ்வாறு வரலட்சுமி விரதத்தை விடாது கடைப்பிடித்து வருபவர்களுக்கு எவ்வளவு சிறப்புகள் வருமோ, அதே அளவுக்கு அவ்விரதத்தில் கலந்து கொள்பவர்களுக்கும் அத்தகைய சிறப்புகள் வந்து சேரும் என்று மூத்த சுமங்கலி பெண்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரத நோன்பை தவறாது அனுஷ்டிக்கும் கன்னிப்பெண்களுக்கு சிறப்பானதொரு மாங்கல்ய பாக்கியமும், சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலமும் அதிகரிக்கும்.
0 comments :
Post a Comment