நவக்கிரகங்கள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. சூரியன் மாதம் ஒரு முறையும், சந்திரன் இரண்டே கால் நாளிலும், செவ்வாய் ஒன்றரை மாதத்திலும், புதனும், சுக்கிரனும் ஒரு மாதத்திலும், குரு ஆண்டுக்கு ஒரு முறையும், சனீஸ்வரர் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறையும், ராகுவும் கேதுவும் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறையும் ஒருராசியை விட்டு அடுத்தராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றனர். (5ம்தேதி) குருபகவான் கடகராசியில் இருந்து சிம்மராசிக்குப் பிரவேசிக்கிறார். நவகிரகப் பெயர்ச்சிகளில் குரு மற்றும் சனிபகவானின் பெயர்ச்சிகள் பக்தர்களால் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. இவை, பெரும்விழாவாகக் கொண்டாடப்படுகின்றன. கிரகங்களின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் விளையும், எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பலன்கள் கணிக்கப்படுகின்றன. உடனடிப் பலன்களை எதிர்பார்ப்பவர்களும், அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களும் ஹோமங்கள் செய்து அதன் மூலம் பலன் பெறலாம் என்பது பெரியோர்வாக்கு.
கலியுகத்தில் இதர வழிபாட்டு முறைகளை விட ஹோமங்கள் மூலம் மனம் ஒன்றுபட்டு இறைவனை வழிபடுவதே எளிதானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறது. ஏழைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல், ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், கோயில் திருப்பணிகளுக்கு நிதியுதவி செய்தல், கோயில்களில் திருவிளக்கு ஏற்றி வழிபடுதல் உள்ளிட்டவை கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரங்கள். அந்தந்த கிரகங்களின் விசேஷங்கள் அடங்கியுள்ள கோயில்களில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் செய்து வழிபடலாம். குருவைப் பொறுத்தமட்டில், பெயர்ச்சி ஆவதற்கு முன்னரே பெயர்ச்சி பலன்களைக் காட்டிவிடக் கூடியவர். குருப்பெயர்ச்சிக்கு முன்னரும், அன்றும், பின்னரும் வழிபடுவதால் கேட்ட வரம் பெற்று மனமகிழ்ச்சியை அடையலாம். குருசன்னதியில் நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும், அவற்றை நிறைவேற்றி நலம் பல பெற வைப்பார் என்பது ஐதீகம். குருப்பெயர்ச்சியையொட்டி, ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் பரிகாரம்செய்து கொள்ள வேண்டும்.
ஆலங்குடி: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பரிகார ஸ்தலமாகும். குருப்பெயர்ச்சியையொட்டி இன்று மாலை 5 மணிக்கு முதல் கால யாகபூஜை நடக்கிறது. நாளை அதிகாலை 3.30 மணிக்கு 2ம் கால யாகபூஜை, 5.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு குருபகவானுக்குத் தங்கக்கவசம் அணிவிக்கப்படும். காலை முதல் இரவு வரை தங்கக் கவச அலங்காரத்தில் குருபகவான் காட்சியளிப்பார். லட்சார்ச்சனை முதல் கட்டமாக கடந்த 21ல் துவங்கி 28ம்தேதி வரை நடந்தது. 2ம் கட்ட லட்சார்ச்சனை வரும் 9ல் துவங்கி, 15வரை நடக்கிறது.
திட்டை: தஞ்சை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்றஸ் தலம். வரும் 13,14ம் தேதிகளில் காலை 8 மணி முதல் 12 வரையும், மாலை 4 மணி முதல் 8 வரையும் லட்சார்ச்சனை நடைபெறும். 15 முதல் 19ம் தேதி வரை காலை 8 மணி முதல் 11 வரை சிறப்புப் பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் : முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம்.
ஓமாம்புலியூர்: சிதம்பரம் அருகில் இத்தலம் உல்ளது. இறைவன் பெயர் ‘துயர்தீர்த்தநாதர்’. இறைவி பூங்கொடிநாயகி. இறைவன் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்கு பிரணவ மந்திரத்தை விளக்கிய தலம் இது. இத்தலத்திற்கு ‘பிரணவ வியாக்கியானபுரம்’ என்ற பெயரும் உண்டு. புலி ஒன்றுக்கு அஞ்சிய வேடன் வில்வ மரத்தில் ஏறி இரவு முழுவதும் வில்வ இலைகளைப் பறித்துப் போட, கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகள் விழுந்து கொண்டிருந்ததால், அவனுக்கு சிவனருள் கிட்டிய தலம் இது. இங்கு தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் காணப்படுகிறார்.
மயிலாடுதுறை : இங்குகோயில் கொண்டுள்ள மயூரநாதரை குருபகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குருபகவானையும், உத்திரமாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோயிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குருதோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்குநிகரான ஆறுதலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று.
தேவூர் : திருத்துறைப்பூண்டியில் இருந்து கீவளூர் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இத்தலத்து இறைவனுக்கு தேவகுருநாதன் என்று பெயர். குருபகவான் வழிபட்ட தலம் இது. இங்கு குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
கும்பகோணம் : கும்பகோணத்தில் மகாமகக்குளமான பொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் கோயில் குருபரிகாரத்திற்கு ஏற்ற கோயில். குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள இறைவனை காசிவிஸ்வநாதர் என்றும், காசிவிசாலாட்சி, தேனார்மொழி என்றும் அழைக்கிறார்கள்.
குருவே துணை : குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குருபகவானுக்கு நிகர் யாரும் இல்லை. பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குருபகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத்தலைவன் என்று பொருள். அமைச்சர், ஆசான், வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக்கிரகர். சாத்வீகம் கொண்டவர். மஞ்சள் நிறமானவர் என்பதால், இவரை ‘பொன்னன்’ என்றும் அழைக்கப்படுகிறார். தயாளகுணம் கொண்டவர். குருபகவானின் 5, 7-ம் பார்வை சகல நன்மைகளையும் தரும். திருமணத்திற்கு குரு பலம் வருவது முக்கியம்.
தன்னை வழிபடுகிறவர்களுக்கு பிறரை வணங்காத உயர்வான பதவியையும், மனமகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும். யானையை வாகனமாக கொண்ட இவருக்கு, கொண்டைக்கடலை பிடித்த உணவு. நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிவார். அரசமரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பவர். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். அது தனுசுராசிக்கும், மீனராசிக்கும் அதிபதி இவர் என்பதை சுட்டிக் காட்டுகிறது. குருபகவான் நீதிமானாகவும் திகழ்கிறார். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர்.
வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குருபகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குருபார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். அதன்படி ராசிசக்கரத்தை கடக்க பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போது தான் ‘மகாமகம்’ நடக்கிறது. குருவை வழிபட்டால் உயர் பதவி கிடைக்கும். செல்வச் செழிப்பு மேலோங்கும். சுகவாழ்வு, மனநிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குருஸ்லோகம்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோமகேஸ்வரஹ. . .
குரு சாட்சாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
0 comments :
Post a Comment